66%மக்கள் புதிய வரி செலுத்தும் முறைக்கு மாற்றம்..
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் புஸ்க் என முடிந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது வருமான வரி சலுகை.. இந்நிலையில் புதிய வருமான வரி செலுத்தும் முறையில் புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் 4 கோடி பேர் புதிய வரிசெலுத்தும் முறையை தேர்ந்தெடுத்து இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளார். வரி செலுத்துவதை எளிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகவும் ,இதன் ஒரு பகுதியாகவே மத்திய பட்ஜெட்டில் புதிய வரி செலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி செலுத்தும் முறையின்படி 66 விழுக்காடு மக்கள் புதிய வரி செலுத்தும் முறைக்கு மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 7.5 கோடியாக உயர்ந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய வரி செலுத்தும் முறையில் வரி செலுத்துவோருக்கு வரிச்சலுகை வரம்பும் மாற்றப்பட்டுள்ளது. இது மக்களுக்கு இன்னும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பழைய வரி செலுத்தும் முறையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் புதிய வரி செலுத்தும் முறையில் வருமான வரி செலுத்துவோருக்கு 17500 ரூபாய் மிச்சம் பிடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. 2023-24 காலகட்டத்தில் 3-ல் 2 பங்கு மக்கள் புதிய வரிசெலுத்தும் முறையை நாடியிருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.