டைடன் நிறுவனத்தின் உயர் மேலாண்மை மாற்றங்கள்: ஜனவரி 2026 முதல் அஜோய் சாவ்லா MD ஆக நியமனம்
டாடா குழுமத்தைச் சேர்ந்த டைடன், அதன் உயர் மட்டத்தில் குறிப்பிடத்தக்க தலைமைத்துவ மாற்றங்களை அறிவித்துள்ளது. இவை 2025, 2026 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வரவுள்ளன. தற்போதைய நிர்வாக இயக்குநரான சி.கே. வெங்கடராமனுக்குப் பிறகு, அஜோய் சாவ்லா 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதிய நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. தற்போது, அஜோய் சாவ்லா டைடன் நிறுவனத்தின் நகைப்பிரிவின் சி.இ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்.
இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, டைட்டனின் முக்கியப் பிரிவுகளிலும் தலைமை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தனிஷ்க் இந்தியாவின் வியாபாரப் பிரிவுக்குத் தலைமை தாங்கும். அருண் நாராயண், 2026 ஜனவரி 1 முதல் டைட்டனின் நகைப்பிரிவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்பார். டாடா குழுமம், டைடன் நிறுவனத்தில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால அனுபவம் கொண்ட இவர், சில்லறை, சந்தைப்படுத்தல், விற்பனைத் தலைமைப் பதவிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கொல்கத்தா, ஐஐஎம்-ல் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், டாடா நிர்வாக சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்.
மேலும், டைட்டனின் கடிகாரப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சுபர்ணா மித்ரா, ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவருக்குப் பிறகு, குருவில்லா மார்கோஸ், 2025 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் கடிகாரப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார். குருவில்லா மார்கோஸ் தற்போது டைடன் நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் 1995 இல் டாடா நிர்வாக சேவையில் இணைந்து, FMCG, தொலைத்தொடர்பு, BPO, ஆலோசனை, டிஜிட்டல், சில்லறை வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் டாடா குழுமத்தில் மூன்று தசாப்த கால அனுபவம் கொண்டவர். இவர் 2015 இல் டைடன் நிறுவனத்தில் தலைமை டிஜிட்டல் அதிகாரியாக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாற்றங்கள் டாடா குழுமத்திற்குள் இருக்கும் திறமையான தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் வியுகத்தின் ஒரு பகுதி, இது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் விரிவாக்க முயற்சிகளுக்கும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
