Intel-க்கு டிரம்ப் நெருக்கடி
சி.இ.ஓ. பதவியிலிருந்து விலக டிரம்ப் வலியுறுத்தல்: இன்டெல் நிறுவனத்தின் பங்குகள் சரிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லிப்-பு டான் (Lip-Bu Tan) உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததையடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன.
ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், “லிப்-பு டான் அதிகபட்சமாக சர்ச்சைக்குரியவர். இந்தப் பிரச்சினைக்கு வேறு தீர்வு இல்லை என்பதால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.
டிரம்பின் குற்றச்சாட்டு:
ட்ரம்பின் இந்த அறிக்கை, குடியரசுக் கட்சி செனட்டர் டாம் காட்டன், டானின் சீன நிறுவனங்களுடனான உறவு குறித்து கேள்வி எழுப்பிய பிறகு வந்துள்ளது.
டான் 2021 வரை சி.இ.ஓ.-வாக இருந்த கேடென்ஸ் டிசைன் (Cadence Design) நிறுவனத்தில் நடந்த ஒரு குற்ற வழக்கை பற்றியும் காட்டன் குறிப்பிட்டிருந்தார்.
இன்டெல் நிறுவனத்தின் பதில்
டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இன்டெல் நிறுவனம், “நிறுவனமும், அதன் இயக்குநர்களும், சி.இ.ஓ. டானும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர்” என்று கூறியது.
மேலும், “நாங்கள் அமெரிக்காவில் செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்து வருகிறோம்.
அரிசோனாவில் உள்ள எங்கள் புதிய உற்பத்தி தொழிற்சாலையில் நாட்டின் மிக மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்” என்றும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் விற்பனை சரிவிலிருந்து நிறுவனத்தை மீட்டெடுக்க, கடந்த மார்ச் மாதம் பேட் ஜெல்சிங்கர்-க்கு (Pat Gelsinger) பதிலாக லிப்-பு டான் இன்டெல் நிறுவனத்தின் சி.இ.ஓ.-வாக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், டிரம்பின் இந்த புதிய கோரிக்கை, நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
