இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட வேண்டும், அமெரிக்க ஆலோசகர் நவரோ
இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தப்பட வேண்டும், அமெரிக்க ஆலோசகர் நவரோ கூறுகிறார்
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல், உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு நிதி அளிப்பதாகக் கூறுகிறார்.
அமெரிக்காவின் ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா கருதப்பட வேண்டுமானால், அதற்குரிய முறையில் இந்தியா செயல்பட வேண்டும் என்றும் நவரோ வலியுறுத்துகிறார்.
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் ரஷ்யாவின் போருக்கு நிதியளிப்பதால் அது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியா தற்போது “ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நெருக்கமாகி வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவின் ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா கருதப்பட வேண்டுமானால், அதற்குரிய முறையில் அது செயல்படத் தொடங்க வேண்டும்” என்றும் நவரோ தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
நவரோ மேலும் கூறுகையில், “ரஷ்ய எண்ணெய்க்கான உலகளாவிய வணிக மையமாக இந்தியா செயல்படுகிறது. அது, தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெயை மதிப்புமிக்க ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றுகிறது, அதே நேரத்தில் ரஷ்யாவிற்குத் தேவையான டாலர்களையும் அளிக்கிறது” என்றார்.
டிரம்பின் நிலையற்ற அணுகுமுறை காரணமாக, நீண்டகால போட்டியாளர்களான சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அமைதியாகவும், எச்சரிக்கையுடனும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார், அதே நேரத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி திங்கள்கிழமை முதல் இந்தியாவுக்கு விஜயம் செய்து, இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஆகஸ்ட் 25 முதல் 29 வரை புது டெல்லிக்கு வரவிருந்த அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதனால், முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகி, ஆகஸ்ட் 27 முதல் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் அமெரிக்க வரிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது.
