வோடஃபோன் ஐடியா, நிதி திரட்ட வங்கிசாரா நிதி நிறுவனங்களை நாடுகிறது
வோடஃபோன் ஐடியா, நிதி திரட்ட வங்கிசாரா நிதி நிறுவனங்களை நாடுகிறது
மூலதனச் செலவினங்களைத் தொடர, தனியார் நிதியை மாற்று வழியாக நாடும் விஐ நிறுவனம்.
வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக வங்கிசாரா நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில், ரூ.25,000 கோடி நிதி திரட்ட வங்கிகளை அணுகியபோது, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை (AGR) பிரச்சனை காரணமாக அந்த முயற்சி தடைப்பட்டது.
கடும் போட்டி, அதிக கடன் சுமைக்கு மத்தியில், மூலதனச் செலவினங்களை (capex) தொடர்ந்து மேற்கொள்ள, குறுகிய காலத்தில் தனியார் கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியைத் திரட்ட நிறுவனம் பரிசீலிக்கிறது.
விடைபெறும் தலைமைச் செயல் அதிகாரி அக்ஷயா மூந்திரா இது குறித்து கூறுகையில், “கடந்த ஆண்டு முதல் நாங்கள் செய்து வரும் மூலதனச் செலவினங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளதால், முழு ரூ.25,000 கோடி அல்லாமல், ஒரு சிறிய தொகையை வங்கிசாரா நிதி நிறுவனங்களிடமிருந்து பெற நாங்கள் ஆலோசித்து வருகிறோம்,” என்றார்.
சமீபத்தில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், விஐ நிறுவனத்தின் மூலதனச் செலவினம் ரூ.2,440 கோடியாக இருந்தது.
கடந்த காலாண்டில், முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.5,000-6,000 கோடி மூலதனச் செலவினம் இருக்கும் என விஐ நிறுவனம் குறிப்பிட்டிருந்தது, அந்த இலக்கை செப்டம்பர் மாதத்திற்குள் அடையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
விஐ நிறுவனத்திற்கு மொத்தம் ரூ.1.7 லட்சம் கோடி கடன் உள்ளது. 2026 நிதியாண்டு முதல், அரசாங்கத்திற்கு நிலுவைத் தொகையாக ஆண்டுக்கு ரூ.18,000 கோடியை விஐ நிறுவனம் செலுத்த வேண்டும்.
இது, அதன் தற்போதைய செயல்பாட்டு வருவாயான ரூ.9,200 கோடியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும்.
