பெரிய எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள்,சிறிய நிறுவனங்களை நேரடியாகச் சவால் செய்யத் திட்டமிட்டுள்ளன
பெரிய எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்கள், கடந்த சில காலாண்டுகளில் சந்தைப் பங்கு இழந்ததால், பிராந்தியச் சிறிய நிறுவனங்களை நேரடியாகச் சவால் செய்யத் திட்டமிட்டுள்ளன.
கையிருப்பு விலைகள், மூலப்பொருள் செலவுகள் குறைந்திருப்பதால், விலைகளை குறைத்து வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்க முடியும் என நிர்வாகிகள் நம்புகின்றனர்.
நீல்சன் ஐக்யூ தரவின்படி, 2024 அக்டோபர் முதல் இவ்வாண்டு ஜூன் வரை, சிறிய நிறுவனங்கள் அதிக விற்பனையை அளவில் (அலகுகள் எண்ணிக்கையில்) பதிவு செய்துள்ளன. பெரிய, நடுத்தர நிறுவனங்கள் விலை உயர்வின் அடிப்படையில் மட்டுமே வளர்ச்சி கண்டன.
பிரிட்டானியா நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள போட்டியாளர்களை குறிவைத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அவர், “இனி சிறிய சந்தைகளில் பல போராட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு போட்டியாளரின் திட்டத்தையும் தனித்தனியாக ஆராய்கிறோம். விலைவாசி சரிவு சூழலில் நாங்கள் வலுவான நிலையில் உள்ளோம்,” என தெரிவித்துள்ளார்.
மரிகோ நிறுவனம், மதிப்புக்கூட்டிய முடி எண்ணெய்களில் (அம்லா எண்ணெய்) சலுகை மற்றும் குறைந்த விலை அறிமுகப்படுத்தியுள்ளது.
பாரசூட் பிராண்டின் தேங்காய் எண்ணெயில் விலைக் குறைப்பு மூலம் சிறிய நிறுவனங்களுடனும் சீரற்ற சந்தையுடனும் போட்டியிட உள்ளது என நிர்வாக இயக்குநர் சௌகத குப்தா கூறினார்.
இந்துஸ்தான் யூனிலீவர், சவர்க்காரம் கட்டி, தூள் போன்ற பிரிவுகளில் விலையை குறைத்துள்ளது. மூலப்பொருள் விலைகள் (எரிபொருள் எண்ணெய், சோடா ஆஷ்) குறைந்ததால் இது சாத்தியமானது.
டாபூர் நிறுவனத்தின் குழந்தை மசாஜ் எண்ணெய் ‘லால் தேல்’ உத்தரப்பிரதேசம், பீஹார் சந்தைகளில் சிறிய நிறுவனம் ஏடி ஆயில் காரணமாக பங்கு இழந்தது; அதைச் சரிசெய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சிறிய நிறுவனங்கள் பெரும் லாப வாய்ப்பை நோக்கி சந்தையில் நுழைந்துள்ளதாகவும், பலர் நிலைத்திருக்க முடியாது என்றும் பெர்ரி குறிப்பிட்டார். எனினும், சிலர் நீடிப்பார்கள்; அதற்கேற்ப பெரிய நிறுவனங்கள் தங்கள் யோசனையைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நீல்சன் ஐக்யூ அறிக்கையில், உணவு, வீடு, தனிநபர் பராமரிப்பு பிரிவுகளில், சிறிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்று, தொழில்துறை சராசரியை மிஞ்சியுள்ளன. இதனால், சந்தைப் போட்டி மேலும் தீவிரமடைவது வெளிப்படையாகத் தெரிகிறது.
