ஹூண்டாய் இந்தியா மின்சார வாகன விரைவு சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது
ஹூண்டாய் இந்தியா 119 மின்சார வாகன விரைவு சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது; இந்தியா முழுவதும் 600 நிலையங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
உலக மின்சார வாகன தினத்தை முன்னிட்டு, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) மின்சார வாகன பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஆகஸ்ட் 2025 நிலவரப்படி, 238 நகரங்களில் 542 விற்பனை நிலையங்களை மின்சார வாகனங்களுக்காக அமைத்துள்ளது.
திட்டமிடப்பட்ட 600 மின்சார வாகன விரைவு சார்ஜிங் நிலையங்களில், 119 நிலையங்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஏற்கனவே நிறுவியுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள், பெரிய நகரங்கள் அதன் டீலர்ஷிப்களில் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் இந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
இதுவரை 1,80,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் அமர்வுகளின் மூலம் 2.3 மில்லியன் யூனிட் எரிசக்தி விநியோகம் செய்யப்பட்டுள்ளது என ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த சார்ஜிங் உள்கட்டமைப்பின் மூலம், 1.6 மில்லியன் கிலோகிராமுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது. இது, கார்பன் நடுநிலைத்தன்மைக்கான இந்தியாவின் இலக்கிற்கு ஹூண்டாய் நிறுவனம் அளிக்கும் பங்களிப்பை காட்டுகிறது.
“ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாஸ் மொபிலிட்டி மின்மயமாக்கலுக்கான இந்திய அரசின் தொலைநோக்கு பார்வையுடன் இணைந்து, புதிய தலைமுறை மின்சார வாகன தளங்கள் வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்வோம்” என ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் கார்ப்பரேட் திட்டமிடல் பிரிவு தலைவர் ஜே வான் ரியு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பசுமை மொபிலிட்டியை ஊக்குவிக்கும் வகையில், 100 விரைவு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவ ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் உறுதியளித்துள்ளது. இதில் 16 சார்ஜிங் நிலையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 30 ஆக உயரும். புதுமை, நிலைத்தன்மை வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் உறுதியுடன் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், தூய்மையான மொபிலிட்டிக்கு நாட்டை மாற்றுவதில் தொடர்ந்து பங்களிக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
