டாடா இன்டர்நேஷனல் தொடர்ந்து நஷ்டம் – வணிக உத்தியில் மாற்றம் அவசியம்
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா இன்டர்நேஷனல், கடந்த இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. முக்கியமாக இரும்புத் தாது, நிலக்கரி, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம், 2024 ஆம் ஆண்டில் ரூ. 213 கோடியும், கடந்த ஆண்டில் ரூ. 477 கோடியும் நஷ்டம் அடைந்துள்ளது.
இது குறித்து டாடா சன்ஸ்-ன் சுயாதீன இயக்குநர் ஹரீஷ் மான்வானி, டாடா ட்ரஸ்ட் தலைவர் நோயல் டாட்டாவிடம், டாடா இன்டர்நேஷனலின் (டி.ஐ.எல்.) நோக்கத்தை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார். டி.ஐ.எல். ஒரு குறிப்பிட்ட உத்தியை கொண்டிருக்கவில்லை என்றும், குறுகிய கால வர்த்தக வாய்ப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த செப்டம்பரில் நடந்த டாடா சன்ஸ் குழுமக் கூட்டத்தில், டி.ஐ.எல்.-ல் ரூ. 1,000 கோடி முதலீடு செய்யவும், கூடுதல் நிதி வழங்கவும் டாடா சன்ஸ் முடிவெடுத்திருந்தது. அந்த கூட்டத்தில், வெளிநாட்டுப் பங்காளிகளை இணைத்து கூடுதல் மூலதனத்தை ஈர்க்கவும், மிட்சுபிஷி கார்ப்பரேஷன், மெர்குரியாவுடன் இரண்டு கூட்டு முயற்சிகளில் $100 மில்லியன் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருப்பதாக நோயல் டாடா தெரிவித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில், டி.ஐ.எல்.-ன் நஷ்டத்திற்கான காரணங்களை நோபல் டாடா விளக்கினார். நஷ்டம் ஏற்பட்டதற்கான காரணங்களில், ஒரு சுரங்க உரிமம் ரத்து செய்யப்பட்டது, நிறுவனத்தின் மறுசீரமைப்பு போன்றவை அடங்கும் என்றும் குறிப்பிட்டார்.
டி.ஐ.எல்.-க்கு மொத்தம் ரூ. 3,000 கோடி தேவைப்படுகிறது, ஆனால் தற்போது ரூ. 1,000 கோடி மட்டுமே முதலீடாகக் கேட்கிறது என்றும் கூறினார்.
டி.ஐ.எல்.-ன் கடந்த ஆண்டு வருவாய் ரூ. 31,868 கோடியாகும். 2020 முதல் நிறுவனத்தின் வருவாய் இருமடங்காக அதிகரித்திருந்தாலும், லாபம், நிகர மதிப்பு (net worth) ஒரு சவாலாக உள்ளது என்று நிர்வாகி ஒருவர் கூறினார்.
இந்த சூழ்நிலையில், நோயல் டாடா இந்த நிறுவனத்தின் வணிக உத்தியை மறுபரிசீலனை செய்து, லாபகரமான நிலையை அடைய கவனம் செலுத்த வேண்டும் என ஹரீஷ் மான்வானி வலியுறுத்தியுள்ளார்.
