EMI கட்டலனா Phone லாக் : ஆர்பிஐ புதிய திட்டம்?
வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் ஸ்மார்ட்போன்களை முடக்கும் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பரிசீலித்து வருகிறது. சிறுகடன் கேட்டு விண்ணப்பிக்கும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கிறது.
இந்த வாடிக்கையாளர்களில் பலர் குறைந்த வருமானம் கொண்டவர்கள். இவர்களுக்கு வழக்கமான பிணையம் (collateral) அல்லது கடன் சரிபார்ப்புகள் பொருந்தாது. இருப்பினும், ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான கடன் தேவை இவர்களிடம் அதிகரித்து வருகிறது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் ஸ்மார்ட்போன்களை முடக்குவதன் மூலம், தங்கள் ஆபத்தைக் குறைத்து, பணம் திரும்பப் பெறுவதை எளிதாக்கலாம். இது ஒரு டிஜிட்டல் பிணையமாகச் செயல்படும். மேலும், கடன் வாங்குபவர்களிடம் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த நடைமுறைகள் கடன் வாங்குபவர்களுக்குப் பல சிக்கல்களை உருவாக்கும் என ரிசர்வ் வங்கி கருதுகிறது. ஸ்மார்ட்போன் முடக்கப்பட்டால், அதில் உள்ள தொடர்பு எண்கள், வேலை தொடர்பான செயலிகள், குழந்தைகளின் கல்வி சார்ந்த பொருட்கள் போன்ற தனிப்பட்ட தரவுகளை இழக்க நேரிடும்.
சிறிய தொழில்முனைவோருக்கு, போன் முடங்குவது என்பது வாடிக்கையாளர் தகவல்கள், கருவிகள் போன்றவற்றை இழப்பது. இதனால் அவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டு, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனும் குறையலாம். மேலும், தவறுதலாக போன் முடக்கப்பட்டால், அதற்கான முறையான தீர்வு வழிமுறைகள் எதுவும் இல்லை.
மறுபுறம், இந்த நடைமுறைக்கு ஆதரவான வாதங்களும் உள்ளன. இது சிறிய தொகைக் கடன்களைப் பெறுவதற்கான வழிகளை எளிதாக்கும். கடனைக் கோருபவர்கள் தங்களுடைய கண்ணியம், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், முறையான குறை தீர்க்கும் வழிமுறைகள் நிறுவப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி இந்த நடைமுறைக்கு சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும் பரிசீலித்து வருகிறது. கடன் வாங்கும்போதே இதற்கு ஒப்புதல் பெற வேண்டும், கடன் கட்ட தவறியபின் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும், கடன் வழங்குபவர்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடக் கூடாது. இந்த பாதுகாப்பு அம்சங்கள், கடன் வழங்குபவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
