4,000ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நிறுவனம்..
விமானப் போக்குவரத்து நிறுவனமான லுஃப்தான்சா குழுமம் ஜெர்மனியில் சுமார் 4,000 நிர்வாக பணி இடங்களை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக AP நிறுவன செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரித்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உறுப்பினர் விமான நிறுவனங்களிடையே பணிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் ஊடாக இது முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் விற்பனை அளவு மற்றும் லாப விகிதம் வலுவாக இருக்கும் என்று கணித்துள்ளது.
லுஃப்தான்சா குழுமம் என்பது உலகளாவிய அளவில் செயல்படும் விமானக் குழுவாகும். இதில் நெட்வொர்க் விமான நிறுவனங்கள், பாயிண்ட்-டு-பாயிண்ட் விமான நிறுவனமான யூரோவிங்ஸ் மற்றும் சேவை நிறுவனங்கள் அடங்கும். இது 2024 இல் 101,709 ஊழியர்களைக் கொண்டிருந்தது. 37,600 கோடி யூரோக்கள் (4,400 கோடி டாலர்) வருவாயை ஈட்டியது.
உறுப்பினர் விமான நிறுவனங்களான ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ், ஐடிஏ ஏர்வேஸ், லுஃப்தான்சா மற்றும் ஸ்விஸ் ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான ஒருங்கிணைப்பின் மத்தியில் இது முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளது.
“எதிர்காலத்தில் எந்தெந்த நடவடிக்கைகள் இனி தேவைப்படாது என்பதை குழு மதிப்பாய்வு செய்து வருகிறது. இரு முறை செய்யப்படும் பணிகள் போன்றவை இதற்கு உதராணம்” என்று இந்த அறிக்கை கூறுகிறது.
AI மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மூலம் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களினால் வணிகப் பகுதிகள் மற்றும் செயல்பாடுகளில் செயல்திறன் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
