இந்தியாவில் Toyota IPO?
உலகின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன், அதன் டோக்கியோ தலைமையகத்தில் இந்திய முதலீட்டு வங்கியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் இந்திய துணை நிறுவனத்தை, இந்திய பங்கு சந்தைகளில் பட்டியலிடுவதற்காக இதை முன்னெடுத்துள்ளது.
இன்னோவா, ஃபார்ச்சூனர் மற்றும் கேம்ரி ரக கார்களின் தயாரிப்பாளரான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன பங்குகளை வெளியிட்டு, சுமார் 70-80 கோடி டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆரம்ப பொது வெளியீடு (IPO) நடந்தால், டோயோட்டோ நிறுவன பங்குகள் உள்நாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேரும். ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் இரண்டாவது உலகளாவிய கார் தயாரிப்பாளராக டொயோட்டா இருக்கும்.
முதலீட்டு வங்கிகள் டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனின் தலைமை நிதி அதிகாரியையும், நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்குப் பொறுப்பான மற்றொரு உயர்மட்ட நிர்வாகியையும் சந்தித்து, பட்டியலிடும் திட்டங்களைப் பற்றி விவாதித்தாக கூறப்படுகிறது.
இந்திய பங்கு சந்தைகளில் ஹூண்டாய் இந்தியா பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்ட பிற உலகளாவிய நிறுவனங்கள் இதே போல் பதிவு செய்து கொள்வது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொயோட்டா மோட்டார் நிறுவனம், டொயோட்டா கிர்லோஸ்கரில் 89% பங்குகளை கொண்டுள்ளது. மீதமுள்ளவை கிர்லோஸ்கர் குழுமத்திடம் உள்ளன. டொயோட்டா மோட்டார் 1997 இல் கிர்லோஸ்கர் குழுமத்துடனான அதன் பார்ட்னர்ஷிப் மூலம் இந்தியாவில் நுழைந்தபோது இந்த அமைப்பு நிறுவப்பட்டது.
டொயோட்டாவின் இந்திய வரிசையில் இன்னோவா, ஹைரைடர், ஃபார்ச்சூனர், ஹிலக்ஸ், கேம்ரி மற்றும் கிளான்சா ஆகியவை அடங்கும். கடந்த 30 ஆண்டு காலத்தில், இந்திய பயணிகள் வாகன சந்தையில் 7.2% சந்தைப் பங்கை உருவாக்கியுள்ளது.
அதே சமயத்தில் ஹைபிரிட்களில் 81% சந்தைப் பங்கை பெற்று முதலிடத்தில் உள்ளது.
