கடனை அடைக்க கடன் வாங்கும் வேதாந்தா..
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ், ஏழு வருட அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் பத்திர வெளியீட்டின் மூலம் 50 கோடி டாலர்களை திரட்டியுள்ளது. இந்த கடன் பத்திரங்களுக்கு விற்பனை தொகையை விட மும்மடங்கு சந்தா செலுத்தப்பட்டுள்ளது.
வேதாந்தா ரிசோர்சஸின் துணை நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் ஃபைனான்ஸ் II பிஎல்சி, அதன் 50 கோடி டாலர் பத்திர வெளியீடு 160 கோடி டாலருக்கும் அதிகமான சந்தா தொகையை ஏலம் மூலம் ஈர்த்ததாகவும், இது வெளியீட்டு அளவை விட மூன்று மடங்கு அதிகம் என்று, பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தொகை பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும், கார்ப்பரேட் செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் சேர்த்து கடந்த 14 மாதங்களில் வேதாந்தா ரிசோர்சஸ், சர்வதேச பத்திரச் சந்தைகளில் இருந்து மொத்தம் 360 கோடி டாலர்களை திரட்டியுள்ளது. இதன் மூலம் கடன்கள் முதிர்ச்சியடையும் தேதிகளை தள்ளி வைத்துள்ளது.
ஆசியாவில் 47 சதவீதமும், EMEA (ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா) இல் 24 சதவீதமும், அமெரிக்காவில் 29 சதவீதமும் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது உலக அளவில் வேதாந்தா குழுமத்திற்கு உள்ள பரந்த அடிப்படையிலான ஆதரவை சுட்டிக்காட்டுகிறது.
பத்திரங்கள் விற்பனையின் கடைசி தேதியில், இந்தப் பத்திரங்கள் மூடிஸ் ரேட்டிங் நிறுவனத்தினால் ‘B2’ மதிப்பீட்டையும், ஃபிட்ச் ரேட்டிங்ஸ் மூலம் ‘B+’ மதிப்பீட்டையும் பெறும் என்று வேதாந்தா ரிசோர்சஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வேதாந்தா ரிசோர்சஸின் ஆண்டு வருவாய் 2024-25ல் 6.4 சதவீதம் அதிகரித்து 1,820 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 550 கோடி டாலர் EBITDA-வை ஈட்டியுள்ளது. இதன் லாப விகிதம் 29.9% ஆக உள்ளது. அதே நேரத்தில் மூலதன செலவுகளுக்கு பிறகான பணப்புழக்கம் 100 கோடி டாலர்களாக உள்ளது.
வேதாந்தா ரிசோர்சஸ், 2022 நிதியாண்டிலிருந்து அதன் கடனை 400 கோடி டாலர்களுக்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. மொத்தக் கடன் 2022 நிதியாண்டில் 910 கோடி டாலராக இருந்து ஜூன் 2025ல் 480 கோடி டாலராக குறைந்துள்ளது.
