LG IPO: அமோக வரவேற்பு
தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவின், முதல் கட்ட பொது பங்கு வழங்கல் (ஐபிஓ) நேற்று தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் சில்லறை மற்றும் நிறுவனமற்ற முதலீட்டாளர்களிடமிருந்து பெரிய அளவில் விண்ணப்பங்களை ஈர்த்தது.
அக்டோபர் 9, வியாழக்கிழமை வரை திறந்திருக்கும் ஐபிஓ மூலம் மொத்த 7.13 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 7.45 கோடி பங்குகளுக்கு ஏலங்களைப் ஈர்த்தது. இதன் விளைவாக நேற்று மாலை ஒட்டுமொத்த சந்தா தொகை 1.05 மடங்காக உயர்ந்துள்ளது.
நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு 2.31 மடங்கு சந்தா செலுத்தப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு, 0.82 மடங்கு முன்பதிவு செய்யப்பட்டது.
தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் (QIB) ஒதுக்கீட்டிற்கு 0.49 மடங்கு சந்தா செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு, 1.90 மடங்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா ஐபிஓ என்பது ₹11,607 கோடி மதிப்புள்ள ஒரு புத்தக மதிப்பு அடிப்படையிலான பங்கு விற்பனையாகும். புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்படாமல், 10.2 கோடி பழைய பங்குகளின் விற்பனையை (OFS) மட்டும் உள்ளடக்கியது. இந்த வெளியீட்டிற்கான விலை வரம்பு ஒரு பங்கிற்கு ₹1,080 முதல் ₹1,140 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டில் குறைந்தபட்சம் 13 பங்குகளுக்கும், அதிகபட்சமாக 13 லாட்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். விற்பனை விலைக்கான உச்ச வரம்பு ஒரு பங்கிற்கு ₹1,140ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டிற்கு குறைந்தபட்சம் ₹14,820 முதலீடு செய்ய வேண்டும்.
ஐபிஓ வருமானத்தை எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பயன்படுத்தாது. அதன் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் இதன் மூலம் வருவாய் ஈட்ட உதவும்.
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தற்போது நொய்டா மற்றும் புனேவில் அமைந்துள்ள இரண்டு உற்பத்தி மையங்களை இயக்குகிறது. இவை ஆண்டுக்கு 1.45 கோடி பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. 2024-25ல் இதில் சுமார் 77% அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ₹5,000 கோடி முதலீட்டில் ஆந்திரப் பிரதேசத்தில் மூன்றாவது உற்பத்தி மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.
