புற்றுநோய் சிகிச்சை மருந்துக்கு ஒப்புதல்
இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்து ஒன்றை சந்தைப்படுத்த, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெகான் (Trastuzumab Deruxtecan) என்ற புதிய மருந்தை இறக்குமதி செய்யவும், சந்தைப்படுத்தவும், விநியோகிக்கவும், மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (CDSCO) ஒப்புதல் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியாத டியூமர் கட்டிகளை குணப்படுத்தவும், உடலின் இதர பகுதிகளுக்கு கேன்சர் நோய் பரவியுள்ள மெட்டாஸ்டேடிக் HER2-பாசிட்டிவ் திட கட்டிகளைக் கொண்ட வயது வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் இந்த மருந்து பயன்படுத்தப்பட உள்ளது. முறையான சிகிச்சையைப் பெற்றவர்கள் மற்றும் திருப்திகரமான மாற்று சிகிச்சை முறை கிடைக்காத நோயாளிகளுக்கு இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது புற்றுநோயியல் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“நோயாளிகளை மையமாகக் கொண்டிருக்கும், சிறப்பான அறிவியல் பூர்வ செயல்பாடு மற்றும் திருப்பத்தை ஏற்படுத்தும் சிகிச்சை முறைகள் ஆகியவற்றிற்கான எங்களின் அர்ப்பணிப்பை இது சுட்டிகாட்டுகிறது.
இந்தியாவில் HER2-பாசிட்டிவ் திட கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெகானை அளிப்பதன் மூலம், மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்து, புற்றுநோய் சிகிச்சை முறையை மேம்படுத்துகிறோம்,” என்று அஸ்ட்ராஜெனெகா பார்மா இந்தியாவின் தலைவரும் எம்.டி.யுமான பிரவீன் ராவ் அக்கினேபள்ளி கூறினார்.
