TCS வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி…
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2025-26 இன் இரண்டாவது காலாண்டில், அதன் நிகர லாபம் 1.4% வளர்ச்சியை அடைந்து ரூ.12,075 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) பங்கு சந்தை நிபுணர்கள் கணித்திருந்த ரூ.12,573 கோடியை விடக் குறைவாக உள்ளது.
செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் ரூ.65,799 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.64,259 கோடியை விட 2.4% அதிகமாகும். இதன் நிகர வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 8.4% உயர்ந்துள்ளது. நிகர லாபம் 19.6% உயர்ந்துள்ளது.
நிறுவனம் இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக, ஒரு பங்குக்கு ரூ.11 ஐ அறிவித்துள்ளது. இது நவம்பர் 4, 2025 அன்று வழங்கப்படும். அக்டோபர் 15, 2025 பங்கு பதிவிற்கான கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், 2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 19,755 ஊழியர்களை இழந்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில், விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் பணிநீக்கங்கள் காரணமாக, அதன் பணியாளர்களில் சுமார் 2 சதவீதத்தினருக்கு, அதாவது தோராயமாக 12,000 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய ஆட்குறைப்புடன், TCS இன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 6,13,069 ஆக உள்ளதாக, அக்டோபர் 9 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முந்தைய ஜூன் காலாண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 5,090 புதிய ஊழியர்கள்களும் இதில் அடக்கம்.
