சாதனை படைத்த LG
எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் ₹11,607 கோடி முதல் கட்ட பங்கு வெளியீடு (ஐபிஓ) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் ₹4.4 லட்சம் கோடி மதிப்புள்ள ஏலங்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. இந்திய பங்கு சந்தை வரலாற்றில், அதிகபட்ச ஏலத் தொகையை ஈர்த்த மிகப் பெரிய ஐபிஓ இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸின் ஐபிஓ கடந்த ஆண்டு நிகழ்த்திய சாதனையை இந்நிறுவனம் முறியடித்துள்ளது. அதன் ₹6,560 கோடி ஐபிஓ கடந்த ஆண்டு ₹3.24 லட்சம் கோடி மதிப்புள்ள ஏலங்களை ஈர்த்திருந்தது.
எல்ஜி நிறுவனம் ஈர்த்துள்ள் 5,000 கோடி டாலர் மதிப்புள்ள ஏலங்கள், இந்திய சந்தையின் ஆழத்தை நிரூபித்துள்ளது. இந்திய சந்தையில், ஐபிஓ வெளியீடுகள் இந்த வாரத்தில் உச்சபட்ச அளவுகளை எட்டியுள்ளது. புதன் அன்று டாடா கேபிடல் அதன் ₹15,512 கோடி ஐபிஓவை வெற்றிகரமாக முடித்தது.
எல்ஜியின் பங்கு விற்பனையில், விற்பனைக்கு முன் வைக்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட 54 மடங்கு அதிக பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. நிறுவன முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 166 மடங்கு சந்தாவைப் பெற்றது. சில்லறை மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் (HNI) பகுதி முறையே 3.6 மடங்கு மற்றும் 22.4 மடங்கு சந்தா பெற்றது. ஐபிஓவிற்கு 65 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.
ஐபிஒ தொடங்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, எல்ஜி நிறுவனம், சிங்கப்பூர் அரசு, அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் பிளாக்ராக் போன்ற உலகளாவிய பெரும் முதலீட்டாளர்களிடமிருந்து ₹3,420 கோடி நிதி திரட்டியது.
இந்திய சந்தையில் எட்டாவது பெரிய ஐபிஓவான இந்த ஐபிஓ மூலம், தென் கொரியாவை தளமாகக் கொண்ட இதன் தாய் நிறுவனத்தின் 15 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. தென் கொரியாவிற்கு வெளியே ஒரு அயல்நாட்டில், எல்ஜியின் முதல் பங்கு விற்பனை இது தான்
