சீனாவுக்கு 100%வரி?: trump அதிரடி..
நவம்பர் ஒன்று முதல் அனைத்து சீனப் பொருட்கள் மீதும் கூடுதலாக 100% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதே நாளில், அனைத்து முக்கியமான மென்பொருள் , ஏற்றுமதிகள் மீதும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு எதிர்வினையாக சீனா புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால், பிறகு இந்த 100% கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு நவம்பர் ஒன்றுக்கும் முன்பே அமல்படுத்தப்படும் என்று ட்ரூத் சோஷியல் சமூக வலை தளம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக சீன அரசு, இதர நாடுகளுக்கு கடிதம் அனுப்பியதாக அவர் குற்றம் சாட்டினார்.
சீனாவின் இந்த முடிவு உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்று கூறினார். சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.
அரிய வகை உலோகங்கள் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை சீனா விரிவுபடுத்தியிருந்தது. ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம் மற்றும் யெட்டர்பியம் ஆகிய ஐந்து புதிய தனிமங்களை, ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது.
இது ஏற்றுமதிக்கு தடைசெய்யப்பட்ட அரிய வகை உலோகங்களின் மொத்த எண்ணிக்கையை 12 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 17 வகை அரிய உலகோகங்கள் உள்ள நிலையில், இவற்றில் 5 உலோகங்கள் மீது மட்டும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இந்த 12 வகை அரிய உலோகங்கள், ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் முதல் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை தளவாடங்கள் வரையிலான தொழில்களுக்கு அவசியமான முக்கியமான கனிமங்களாகும்.
செமிகண்டக்கர்கள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பயன்படுத்தப்படும் உற்பத்தி தொழில்நுட்பங்கள் ஏற்றுமதி மீதும் புதிய கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. கூடுதலாக, மின்சார வாகனங்களில் முக்கிய கூறுகளான லித்தியம் பேட்டரிகள் மற்றும் கிராஃபைட் அனோட் பொருட்கள் மீதும் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்ததாக CNN தெரிவித்துள்ளது. இவை வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
இதற்கு எதிர்வினையாக அனைத்து சீனப் பொருட்கள் மீதும் டிரம்ப் 100% கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளார்.
