TCS -ன் அடுத்த அதிரடி..
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 ஊழியர்களுக்கு, அதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் ஆறில் ஒரு பங்கிற்கு, மீள் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வாடிக்கையாளர் தேவையை மறுவடிவமைத்து வருவதே இதற்கு காரணம் என்று நிக்கி ஆசியா தெரிவித்துள்ளது.
TCSஇன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) ஹாரிக் வின், நிக்கி ஆசியாவிடம் கூறுகையில், ”AI இன் எழுச்சி வேறு எந்த தொழில்நுட்ப அலையையும் போல் அல்லாமல் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. தன்னிச்சையாக கற்றுக் கொண்டு, அடுத்த கட்டத்திற்கு மாறும் திறன் கொண்ட AI கருவிகள், புது வகையான சோதனை திட்டங்களையும், தர நிர்ணயத்தையும் கோருகின்றன” என்றார்.
இந்த மாற்றங்களை எதிர்கொள்ள TCS, அதன் ஊழியர்களுக்கான கற்பித்தல் திட்டங்களை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 பேருக்கு மீள் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. ஊழியர்கள் AI கருவிகளைப் பரிசோதிக்கவும், நடைமுறை அனுபவத்தைப் பெற ஹேக்கத்தான்களில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும், இந்த மாற்றம் சவாலானது என்று வின் கூறினார். ஒவ்வொரு நிறுவனமும் இதைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் வின் குறிப்பிட்டார்.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில், டிசிஎஸ் நிறுவனம் ₹12,075 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 1.4 சதவீதம் அதிகம். ₹ 1135 கோடி அளவுக்கு மறுசீரமைப்புச் செலவுகளே இந்த குறைவான வளர்ச்சி விகிதத்திற்கு காரணம். TCSஇன் வருவாய் 2.4 சதவீதம் அதிகரித்து ₹65,799 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலையில் சுமார் 12,200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக TCS அறிவித்தது., இது அதன் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் சுமார் 2 சதவீதம் ஆகும். சமீபத்திய காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20,000 அளவுக்கு குறைந்து, 5,93,314 ஆகக் குறைந்துள்ளது.
