வேதாந்தாவுக்கு ஒப்புதல் கொடுத்த CCI
கடனில் மூழ்கியுள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (JAL) நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான வேதாந்தாவின் முன்மொழிவுக்கு இந்திய போட்டி ஆணையம் (CCI) கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் திவால் நடவடிக்கையில், ஏலத்தில் வெற்றி பெற்றால் பிறகு JALஐ முழுமையாக கையகப்படுத்த முடியும்,
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT), அலகாபாத் பெஞ்ச், ஜூன் 3, 2024 அன்று வெளியிட்ட உத்தரவில், திவால்நிலை சட்டம் 2016 இன் விதிகளின்படி, JAL தொடர்பாக, கார்ப்பரேட் நிறுவன திவால்நிலை தீர்வு செயல்முறையை (CIRP) தொடங்க உத்தரவிட்டது. ”JAL இன் CIRP தொடர்பாக, வேதாந்தா சமர்ப்பித்த தீர்வுத் திட்டத்தை செயல்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று CCI தெரிவித்துள்ளது.
திவால்நிலை சட்டத்தின் (IBC) விதிகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைத் தொடர்ந்து, ஏலம் எடுக்க விரும்பும் நிறுவனம், அதற்காக ஒரு தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிக்க, இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், கடனில் மூழ்கியுள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (JAL) ஐ ₹17,000 கோடிக்கு கையகப்படுத்துவதற்கான ஏலத்தில், வேதாந்தா நிறுவனம் அதானியின் குழுமத்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸின் நிகர தற்போதைய மதிப்பு ₹12,505 கோடியாக உள்ளது.
ரியல் எஸ்டேட், சிமென்ட், மின்சாரம், ஹோட்டல்கள் மற்றும் சாலை கட்டுமான துறைகளில் ஈடுப்பட்டுள்ள JAL, கடன்களை செலுத்தத் தவறியதால் திவால் நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளது.
இந்த செயல்முறையை நடத்துவதற்காக கடன் வழங்குநர்கள் குழு (CoC) கூட்டம் நடைபெற்றது. நிதிக் கடன் வழங்குநர்கள் JAL நிறுவனத்திடம் இருந்து மொத்தம் ₹57,185 கோடி அளவுக்கு செலுத்தப்படாத நிலுவைத் தொகையைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
