திவால் நபராக அறிவிக்கப்பட்ட மல்லையாவிற்கு என்ன நடக்கவிருக்கிறது? ஓர் அலசல்!
திங்கள் கிழமை இங்கிலாந்து சட்டப்படி விஜய் மல்லையா திவாலான நபராக அறிவிக்கப்பட்டார். விசாரணையை எதிர்கொள்ள இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிரான சட்டப் போரில் சிக்கியுள்ள 65 வயதான மல்லையாவிற்கு,இதனால் என்ன நடக்கப் போகிறது.? மல்லையாவிற்கு கடன் கொடுத்த இந்திய வங்கிகள் மற்றும் பிறர் இனி என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம்.
மல்லையாவிற்கு என்ன ஆகும்?
பிரிட்டிஷ் சட்டப்படி, திவால்நிலை என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் கடன்கள் அவரின் டெபிட் கார்டுகள், வங்கிக் கணக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதாவது அவர்களின் நிதிக் கருவிகள் இனி அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஒரு நபர் திவாலான பட்டியலில் இருக்கும் வரை, அவரின் தனிப்பட்ட செலவுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. அத்தகைய நபருக்கு வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். ஒரு பேச்சுக்கு, ஏதேனும் நிறுவனத்தில் இயக்குநர்கள் குழுவில் இருக்க வேண்டும் என்றால், நீதிமன்றம் அனுமதி அளிக்கவேண்டும்.
மல்லையாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவரது சொத்துக்கள் ஒருங்கிணைக்கப்படும். அவர் தனது சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் செலுத்த வேண்டிய கடன்களைத் திரும்பிப்பெற, மல்லையாவின் சொத்துக்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமையிலான இந்திய வங்கிகள் பயன்படுத்த இந்த உத்தரவு அனுமதிக்கிறது. ஆனால், மல்லையா உயர் நீதிமன்றத்தில் இந்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் என்பதை மறக்க வேண்டாம்.
வங்கிகளுக்கு நிறைய வேலை இருக்கிறது!
திவால்நிலை உத்தரவு, ஒப்படைப்பு (extradition) வழக்குடன் தொடர்புடையது இல்லை என்றாலும், அதை ஒப்படைப்பு வழக்கில் ஒரு முக்கிய அம்சமாக பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். கடன் வழங்கியோருக்கும் நிறைய வேலை இருக்கிறது. அவர்கள் இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் மல்லையாவின் சொத்துக்களை அடையாளம் காண வேண்டும். இது இங்கிலாந்தில் எளிதாக இருந்தாலும் (கோர்ட் ஆர்டர் இருப்பதனால்), பிற நாடுகளில் இது சிரமமாக இருக்கலாம்.