வோடபோன்-ஐடியாவால் அடிமேல் அடி; அரசாங்கத்திடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று கதறும் பிர்லா!
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான (telecom companies) சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத்தொகை (adjusted gross revenue dues) குறித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு முன்னதாக, வோடபோன் – ஐடியா லிமிடெட் நிறுவனத்திற்கு உடனடி ஆதரவு கோரி ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
ஜூன் 7 ஆம் தேதி கேபினட் செயலாளர் ராஜீவ் கபாவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், பிர்லா, வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தக்கவைத்து, கடன்களை செலுத்துவதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து ₹25,000 கோடியை திரட்ட முயற்சிப்பதாகக் கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் பாக்கிகள், ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் (spectrum dues) மீதான தடை மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் (floor pricing regime) போன்ற விஷயங்களில் முதலில் தெளிவு வேண்டும் என்கின்றனர். இது சம்பந்தமாக உறுதியான நிலை இல்லாததால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள் என்று பிர்லா தனது கடிதத்தில் கூறுகிறார்.
வோடபோன்-ஐடியாவுக்கு அரசாங்கம் விரைவில் போதிய ஆதரவை வழங்காவிட்டால், நிறுவனம் சரிந்து விடும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
தனி நலனைக் கருதாமல், வோடபோன்-ஐடியாவின் செயல்பாடுகளை வலுப்படுத்த அனைத்து சாத்தியமான தீர்வுகளையும் அவசரமாக அரசாங்கத்துடன் இணைந்து ஆராய்வதில் ஆர்வமுள்ளதாக பிர்லா கூறுகிறார். ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு வோடபோன் ஐடியாவில் 27.66% பங்குகள் உள்ளன.
நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சியில், ஆதித்யா பிர்லா குழு வோடபோன்-ஐடியாவில் தனது பங்குகளை அதிகரிக்க வாய்ப்பில்லை என்கிறது மீடியா வட்டாரங்கள்.
வோடபோன்-ஐடியா கடுமையான நிதி அழுத்தத்தை எதிர்கொண்டாலும், அது எந்த கடனையும் திருப்பிச் செலுத்த தவறவில்லை என்று பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், வோடபோன்-ஐடியா அதற்கு அடுத்த 12 மாதங்களுக்குள் ₹23,200 கோடி தரவேண்டி இருக்கிறது என்று கூறியது. ஒப்பிடுகையில், நிறுவனத்திடம் ₹350 கோடி ரொக்கமும், நிலம் மற்றும் வரி திருப்பிச் செலுத்தும் தொகை (land and tax refunds) ₹3,000 கோடியும் உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் நிறுவனம் பதினோராவது தொடர்ச்சியான காலாண்டில் நிகர இழப்பை (net loss) சந்தித்தது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் ₹4,532 கோடியிலிருந்து அதன் நிகர இழப்பு ஜனவரி-மார்ச் மாதத்தில் ₹7,023 கோடியாக அதிகரித்துள்ளது.
முன்னதாக, வோடபோன்-ஐடியா, டாடா டெலி சர்வீசஸ் லிமிடெட் மற்றும் பாரதி ஏர்டெல் லிமிடெட் ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தொலைத்தொடர்புத் துறைக்கு எதிராக சவாலை விடுத்தது. ஜூலை 23 அன்று, உச்ச நீதித்துறை தொலைதொடர்பு நிறுவனங்களின் மேல்முறையீடுகளை நிராகரித்தது, மேலும் நிலுவைத் தொகை(dues) மீண்டும் கணக்கிட அனுமதிக்கப்படாது என்று குறிப்பிட்டது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன், ஜூலை 19 அன்று, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் அரசாங்கத்திடம் இருந்து தனக்கு எந்த அறிவுறுத்தலும் இல்லை என்றும் பதிலளிக்க இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அக்டோபர் 2019 இல், உச்சநீதிமன்றம், சட்டரீதியான கட்டணங்களை (statutory levies) கணக்கிடும்போது மூல வருவாயல்லாத பிற வருமானங்களும் கணக்கில் (non-core revenue) சேர்க்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இது பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியாவின் கடன்களை ₹90,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.