“Fortune – 500” தரவரிசையில் சறுக்கிய ரிலையன்ஸ், பட்டியலில் யாருக்கு என்ன இடம்?
உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் Fortune – Global 500 தரவரிசையில் 59 இடங்கள் கீழிறங்கி 155 ஆவது இடத்தை அடைந்திருக்கிறது. புகழ்பெற்ற “Fortune” இதழின் பல்வேறு துறைசார்ந்த தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இந்தப் பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) வெளியான உலகின் பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் காணப்படும் மிக முக்கியமான மாற்றங்களை நாம் பார்க்கலாம்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானத்தை இழந்திருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சரிவை சந்தித்திருப்பது இந்தப் பட்டியலின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சரிவானது 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகான மிகப்பெரிய சரிவாகும். “வால்மார்ட்” (Walmart) நிறுவனம் 524 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்திருக்கிறது. சீனாவின் “ஸ்டேட் கிரிட்” (State Grid) இரண்டாமிடத்தில் இருக்கிறது. 280 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் அமேசான் (Amazon) நிறுவனம் மூன்றாம் இடத்திலும், சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம் (China National Petroleum) நான்காவது இடத்திலும், சினோபெக் குழுமம் (Sinopec Group) ஐந்தாவது இடத்திலும் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.
2020 இல் தேவைகள் குறைந்து உலகெங்கும் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருமானமானது 25.3 % (63 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சரிந்து பட்டியலில் 155 ஆவது இடத்தை எட்டியிருக்கிறது. கச்சா எண்ணெய் (crude oil) விலை வீழ்ச்சி காரணமாக இதர இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பட்டியலில் சரிவை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனம், பட்டியலில் 221 ஆம் இடத்தில இருந்து 16 இடங்கள் முன்னேறி 205 ஆவது இடத்துக்கு வந்திருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 61 இடங்கள் கீழிறங்கி 212 ஆவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பட்டியலில் முன்னேற்றம் கண்டிருக்கிறது, கடந்த ஆண்டில் அது 15 இடங்கள் முன்னேறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ONGC, 53 இடங்கள் பின்தங்கி 243 இடத்தை எட்டியிருப்பது, மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் (Rajesh Exports) வியத்தகு வகையில் 114 புள்ளிகள் முன்னேறி 243 ஆவது இடத்தையும். டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் 20 புள்ளிகள் கீழிறங்கி 357 ஆவது இடத்திலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கடந்த வருடத்தில் இருந்த 309 ஆவது இடத்தில இருந்து 394 ஆவது இடத்துக்கும் பின்தங்கி இருக்கின்றன. மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனங்கள் எவ்வளவு வருமானமீட்டி இருக்கின்றன என்பதை பொறுத்து தரவரிசைப் பட்டியல் வெளிப்படுவதாக Fortune தெரிவித்திருக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வருமானம் 52 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மொத்த வருமானம் 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், ONGC யின் மொத்த வருமானம் 46 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸின் மொத்த வருமானம் 35 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருக்கிறது.
வால்மார்ட் நிறுவனம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்திருப்பதும், 1995 ஆம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால் 16 முறை முதலிடத்தைப் பெற்ற நிறுவனமாக வால்மார்ட் இருப்பதாக Fortune குறிப்பிடுகிறது. 135 நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் (ஹாங்காங் உட்பட) இந்தப் பட்டியலை ஆக்கிரமித்திருப்பதும், கடந்த ஆண்டை விட கூடுதலாக 15 சீன நிறுவனங்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பதும் உலக வணிகத்தை சீனா மெல்ல மெல்ல கைப்பற்றி வருவதை எடுத்துக் காட்டுகிறது.
ஏறக்குறைய சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தைவான் நிறுவனங்களையும் சேர்த்தால் 143 இடங்களை சீனா கைப்பற்றி இருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, அமெரிக்க நிறுவனங்களில் 1 கூடுதலாகச் சேர்ந்து 122 என்ற எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 53 நிறுவனங்களோடு மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.
உலகின் மொத்த உற்பத்தியில் இந்த 500 நிறுவனங்கள் மூன்றில் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களின் மொத்த வருமானம் 31.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இது கடந்த ஆண்டை விட 5 % குறைவாகும். இந்த நிறுவனங்களின் நிகர லாபம் மட்டும் 1.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது மட்டுமன்றி உலகமெங்கும் 69.7 மில்லியன் வேலைவாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்கி இருக்கின்றன.
பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் 57 பில்லியன் அமெரிக்க டாலர் லாபமீட்டி இருப்பதோடு, உலகின் அதிக லாபமீட்டும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பட்டியலில் இந்தமுறை 14 ஆவது இடத்தல் இருக்கும் சவுதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்தின் கடந்த இரண்டு வருட சாதனையை முறியடித்து ஆப்பிள் இந்த இடத்தை அடைந்திருக்கிறது.
Source – Rediff