90 சதவீதம் மேல் கடன்களை அடைத்த Zee நிறுவனர் சுபாஷ் சந்திரா!
Essel குழும நிறுவனர், சுபாஷ் சந்திரா தனது கடனில் 91.2 சதவிகிதத்தை, தனக்குக் கடன் கொடுத்த 43 பேரிடம் திருப்பி அளித்திருக்கிறார், மீதமுள்ள கடனையும் விரைவில் அடைக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
“எங்களுக்குக் கடன் வழங்கிய 110 கடன் கணக்குகளில் 43 கடன் கணக்குகள் தீர்க்கப்பட்டிருக்கிறது, மொத்த கடனில் 91.2% தீர்க்கப்பட்டு நிதி நெருக்கடியிலிருந்து நாங்கள் வெளியே வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொகையில் சுமார் 88.3% செலுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள கடனில் 2.9% உடனடியாக செலுத்தப்படும் நிலையில் உள்ளது. எஞ்சியுள்ள மொத்த கடனில் 8.8% ஐத் தீர்க்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று அவர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்பு ஒரு கடிதத்தில் சந்திரா தன்னால் கடன் அளித்தவர்களுக்கு நடந்த இடையூறுகளுக்கு மன்னிப்பு கோரினார். இந்த நிதியாண்டு முடிவதற்குள், மீதமுள்ள கடனையும் அடைத்து விடுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
பெரும்பாலான சொத்துகளை விற்றதில் தனக்கு வருத்தம் இல்லை என்று கூறிய சந்திரா குடும்ப மானமே முக்கியம் என்று சொன்னார். நிதி சேவைகள், நாளிதழ் போன்ற துறைகளில் இனி கால் வைக்க போவதில்லை என்றும், வீடியோ தொடர்புடைய சேவை ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார் சந்திரா.