“பியூச்சர் குரூப்” வழக்கில் ரிலையன்ஸை வீழ்த்திய அமேசான்!
“பியூச்சர் குரூப்” சில்லறை விற்பனை (retail) நிறுவனத்துக்கு எதிரான மோதலில் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுக்கு ஒரு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. டெல்லி உச்ச நீதிமன்றத்தில் “பியூச்சர் குரூப்” மற்றும் அமேசான் இடையே நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாரிமன் மற்றும் கவாய் தலைமையிலான அமர்வு, “பியூச்சர் குரூப்” சார்பாக வாதிட்ட ஹரிஷ் சால்வே, அமேசான் சார்பாக வாதிட்ட கோபால் சுப்பிரமணியம் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட பின்பு, இந்திய சட்டத்தின்படி சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்கவும், அமல்படுத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியது .
அமேசானுக்கும், பியூச்சர் க்ரூப்புக்கும் என்ன பிரச்சனை?
ஆகஸ்ட், 2019 இல், பியூச்சர் குரூப் பெரிய அளவில் கடன் சுமையில் சிக்கி இருந்தது. அப்போது ஆபத்பாந்தவனாக வந்த அமேசான் அந்த நிறுவனத்தின் 49% பங்குகளை வாங்கியது, இதன் மதிப்பு ஏறத்தாழ ₹1,500 கோடி. இந்த முதலீட்டின் மூலமாக அடுத்த 5 முதல் 10 வருடங்களில் பியூச்சர் குரூப்பின் பெருன்பான்மையான பங்குகளை வாங்கப்போவதாகவும், வணிகத்தைக் கைப்பற்றப் போவதாகவும் அமேசான் தெரிவித்திருந்தது. ஆனால், ஒப்பந்தங்களை மீறும் விதமாக அமேசானின் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பெரும்பாலான பங்குகளை விற்க முடிவு செய்து 24,731 கோடி ரூபாயில் ஒப்பந்தம் போட்டதுதான் இந்த வழக்கிற்கான மூலகாரணம்.
பியூச்சர் குரூப்பின் இந்த முடிவை எதிர்த்து சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் அமேசான் வழக்குத் தொடர்ந்து சாதகமான தீர்ப்பைப் பெற்றது. ஆனால், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பியூச்சர் குரூப்பும், அமேசானும் இந்திய நீதிமன்றத்தில் முட்டி மோதின. இந்த வழக்கில் தான் இன்று தீர்ப்பு வழங்க்கப்பட்டிருக்கிறது.
தீர்ப்பில், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் அமைப்பின் தீர்ப்பை ஏற்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்தவும் இந்திய சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது . இந்தத் தீர்ப்பு அமேசானுக்கு சில்லறை வணிகத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குப் இந்தத் துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் வணிக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இனி இந்த வழக்கில் சிங்கப்பூர் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றால் தான், பியூச்சர் குரூப் மீண்டும் இந்திய நீதிமன்றத்தை நாட முடியும் என்பதால், சில்லறை வணிகத்தில் மிகப்பெரிய அளவில் காலூன்றத் தயாராக இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.