புதுப்பிக்கப்பட்ட வருமான வரி சேவை இணையதளம் இன்னமும் மக்களை வாட்டியெடுக்கிறது!
எளிதாக மக்கள் வருமான வரி செலுத்த அரசு – www.incometax.gov.in – என்ற இணையதளத்தை கொண்டு வந்தது. ஆனால் இரண்டு மாதம் கழித்தும் அதில் இருக்கும் சிக்கல்கள் சரி செய்யப்படவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.
வரி செலுத்தும் விவரங்களில் ஏதேனும் திருத்தம் வேண்டுமென்றால் இணையதளம் அதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்றும், ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.
ஆதார் ஒடிபி (Aadhaar OTP) வரவில்லை என்று வேறு சிலர் கூறுகின்றனர். நிறைய பேருக்கு ஷேர் போன்றவற்றில் இருந்து வருமானம் உண்டு. அந்த வருமானத்தைப் பற்றிய விவரங்கள் சேர்க்கும் ITR 3 சேவை சரியாக செயல்படவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
அதிகமாக வரி கட்டி விட்டோம் என்றால், அதை திரும்பப் பெற (tax refund) வாய்ப்புண்டு. அதற்கு நம் வங்கி கணக்கை இணைக்க வேண்டும். அது சில பேரால் செய்ய முடியவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இறந்து போனவர்களின் பிரதிநிதியாக சட்ட வாரிசு (legal heir) வருமான வரியை செலுத்தலாம். ஆனால் சட்ட வாரிசுகளால் அதை செய்ய முடியவில்லை என்கிறது ஒரு வட்டாரம். இவை அனைத்தையும் எப்பொழுது சரி செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.