கிடுக்கிப் பிடி போடும் சீன அரசு, அழிவை நோக்கி டெக் நிறுவனங்கள்!
கடந்த சில மாதங்களாகவே சீனாவின் டெக் நிறுவனங்களுக்குக் கெட்ட காலம் தான் போல. பன்னாட்டு பொருளாதார அரங்கில் கொடிகட்டிப் பறந்த பல சீன நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பெரும் இழப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
என்ன நடக்கிறது சீனாவில்?
சீனாவின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்று ANT Financial. “ஜேக் மா” என்பவரால் நிறுவப்பட்ட அலிபாபா குழுமத்தின் அங்கமான இந்த நிறுவனத்தின் மீது கடுமையான அழுத்தங்களை சீன அரசு மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்தது. சீன அரசை எதிர்மறையாக விமர்சித்த “ஜேக் மா” சில காலம் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. அவரை சீன அரசு சிறைப்படுத்தி இருப்பதாக ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது.
இப்போது “டென்சென்ட்” (Tencent) நிறுவனம் சீன அரசின் கிடுக்கிப்பிடியில் சிக்கி இருக்கிறது. டென்சென்ட் சீனாவின் முன்னணி மொபைல் சேவை வழங்கும் ஒரு டெக் நிறுவனமாகும். சீன அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் அபராதம் காரணமாக ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 170 பில்லியன் அமெரிக்க டாலர்களை சந்தை மதிப்பில் இழந்திருக்கிறது டென்சென்ட்.
சீன அரசு குறிப்பாக பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களைக் கையில் வைத்திருக்கும் நிறுவனங்களின் மீது கழுகுக் கண் கொண்டு பின்தொடர்கிறது. ஏனெனில் தனது குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்பவர்கள் அரசுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ள முடியும் அல்லது அவர்களை ஒருங்கிணைக்க ஏதுவாக இருக்கும் என்ற அச்சமும், எதிர்காலத்தில் அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் சீன அரசு மிகக் கவனமாக இருக்கிறது.
சீன அரசு எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளால் பல சீன நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பை இழந்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சீன நிறுவனங்கள் சந்தித்த இழப்புகளின் விவரம் :
1) டென்சென்ட் நிறுவனம் – 170 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
2) அலிபாபா (Alibaba) குழுமம் – 103.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
3) மெய்டு வான் – 87.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
4) பிண்டுவோடுவோ -59.5 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
5) கெவி-சாவ்-மோவ்ட்டாய் – 49 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
6) கைசோவ் டெக்னாலஜீஸ் – 43 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
7) வுலியாங் யே இபின் – 30.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு
8) பிங் என் இன்சூரன்ஸ் குழுமம் – 29.2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
9) கே.ஈ ஹோல்டிங்க்ஸ் – 27.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு
சீனாவின் பல முன்னணி டெக் நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் சந்தித்த இழப்பு மட்டும் சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 70,000 கோடியாகும்.
டெக் நிறுவனங்கள், அரசையும் மக்களையும் ஏமாற்றுவதாகவும், குறிப்பிட்ட சில துறைகளில் தனி சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்க முனைவதாகவும் குற்றம்சாட்டி சீன அரசு இத்தகைய கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி சீன கம்யூனிச அரசின் அடிப்படைகளை அசைக்க ஒரு காரணியாக அமைந்து விடும் என்று சீன அரசு அஞ்சுவதாலேயே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.
எது எப்படியோ, சீனா உலகின் அசைக்க முடியாத பொருளாதார ஆற்றலாக உருவெடுத்து, பல்வேறு துறைகளில் பெரியண்ணன் அமெரிக்காவுக்கு சவால் விடுவது என்னவோ மறுக்க முடியாத உண்மை.