குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம், “செக்” வைத்த நிதியமைச்சர்!
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்த தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது, பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த வாக்குறுதி, விமர்சனங்களுக்கும் ஆளானது, பணக்காரர்கள், நல்ல சம்பளத்தில் அரசு வேலை பார்க்கும் குடும்பங்களுக்கும் இது பொருந்துமா? என்ற கேள்வி விமர்சகர்களால் எழுப்பப்பட்டது.
எது எப்படியோ, திமுக ஆட்சியைப் பிடித்த சில நாட்களிலேயே இந்த வாக்குறுதி என்ன ஆனது என்று பல தரப்பில் இருந்தும் குரல் எழுப்பப்பட்டது, இந்தக் கேள்விகளுக்கு தமிழக பட்ஜெட் உரையில் பதில் அளித்திருக்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
நிதி அமைச்சர் ஆற்றிய பட்ஜெட் உரையில், “இல்லத்தரசிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கான திட்டம். கோவிட் பெருந்தொற்றின் போது மாநிலத்திலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய், இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது. இந்த நிதி உதவியை பணக்காரர்களுக்கும், நல்ல சம்பளம் வாங்கும் மக்களுக்கும் வழங்கக்கூடாது என்ற விமர்சனங்களும் வழக்குகள் எழுந்தன. ஏழை மக்களுக்கு இந்த அடிப்படை உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்வதற்காக நிபுணர்களுடன் ஆலோசித்து இந்தத் திட்டத்திற்கான தகுதி வாய்ந்த குடும்பங்கள் கண்டறியப்படும் என்றும், அதற்கான அளவுகோல்கள் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்து வருகிறது. இந்த வழிமுறைகள் பெருமளவில் விளம்பரப்படுத்தப்படும். தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறிந்த பின்பு தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
*இதன் மூலம் இந்தத் திட்டத்தை இப்போதைக்கு செயல்படுத்த இயலாது என்பதும், தகுதியான ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்கள் மட்டுமே பயனடையும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்பதும் தெளிவாகிறது, அதே நேரத்தில், இந்தத் திட்டம் 10 ஆண்டு காலத்துக்கான தொலைநோக்கு வாக்குறுதியாகவே வழங்கப்பட்டது என்பதும், பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட 5 லட்சம் வரைக்குமான வருமான வரிவிலக்கு வாக்குறுதி முந்தைய ஆட்சியின் கடைசி ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது என்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது.