புதிய ரூல்ஸ் போட்ட சவுதி அரசு..
சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்வோருக்கு புதிய விசா விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வீட்டு வேலைகளுக்கு விசா கேட்டு விண்ணப்பிக்க தகுதியுள்ளோரின் குறைந்தபட்ச வயது 24 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யார் யாரெல்லாம் இந்த பணிகளுக்கு தகுதியானவர்களை எடுக்கலாம் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. சவுதியைச் சேர்ந்த குடிமக்கள், சவுதி கணவனின் வெளிநாட்டு மனைவிகள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் இந்த வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் விவரங்களை வெளியிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வீட்டு வேலைகள் எனப்படும் டொமஸ்டிக் லேபர் பிரச்னைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் பணியாற்றிய பணியாளரை வேறொரு வீட்டுக்கு மாற்றிக்கொள்ள வகையும் செய்யப்பட்டுள்ளது. வீட்டு வேலைகளை செய்வோருக்கு பிரத்யேக துறையாக musaned என்ற துறை இயங்கி வருகிறது. இதன் வாயிலாக புதிதாக யாருக்காவது வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகளை கூட்டிப்பெருக்கி பணி செய்வோர், ஓட்டுநர்கள், வீட்டுப்பணியாளர்கள், சமையலர்கள், விவசாயிகள், தையலர்கள், வீட்டிலேயே தங்கி பணியாற்றும் செவிலிகள், டியூசன் சொல்லித்தருவோர், ஆயாக்கள் இந்த பிரிவின் கீழ் வருவார்கள். வேலைக்கு ஆட்களை எடுப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வீட்டு வேலை கொடுப்போர், பணியாளர்கள் இடையே பிரச்னைகள் எழக்கூடாது என்பதற்காகவே சவுதி மன்னர் உத்தரவின்பேரில் இந்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.