பெரிய நாடுகளையே கதிகலங்க வைக்கும் பணவீக்க உயர்வு
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் சில்லறை பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு 6.8%ஆக சரிந்துள்ளது கடந்த செப்டம்பரில் இது 7.4%ஆக இருந்தது. சந்தையில் பருப்பு வகைகளின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் உண்மையான விலையேற்றம் காய்கனிகளில் தான் இருந்தது. கடந்த அக்டோபரில் வழக்கத்துக்கு மாறாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காய்கனிகள் வரத்து குறைந்து விலை கட்டுக்கு அடங்காமல் உயர்ந்தது இதேபோல் ஆடைகள்,காலணிகள் விலையும் ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில் இருந்தது. மிக மோசமான விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தின் பாதிப்பு இதற்கு மேல்தான் வர இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவில் பணவீக்கம் கணிசமாக குறைவது போல தெரிந்தாலும் உண்மையில் சேவைத்துறையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகமே தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் சீனா மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வந்து மக்கள் நடமாட ஆரம்பித்தால், சரிந்திருந்த பொருட்களின் விலை மீண்டும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயரும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர். சர்வதேச நாணைய நிதியம், உலக வங்கி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாடுகளும் தங்கள் கணிப்புகள் பொய்யாகி வருவதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவில் மாறி வரும் சூழலை கருத்தில் கொண்டு இந்தியாவிலும் பல்வேறு மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவர உள்ளது. வரும் நிதி கொள்கை கூட்டத்தில் 40 முதல் 55 அடிப்படை புள்ளிகள் கடன் விகிதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதால் விலைவாசி உயர்வு, பணவீக்கம் இரண்டையும் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது.