பாய் கறியாவே கொடுத்துடுங்க என செந்தில் கேட்கும் ஸ்டைலில் ஒரு சம்பவம்..
வோடஃபோன் ஐடியா நிறுவனம் அலைக்கற்றை வாங்கியதும், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் பல ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த சூழலில்,கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அந்த நிறுவனம் தொடர்ந்து முன்னேறவும், மக்களின் மத்தியில் இழந்த வாடிக்கையாளர்களை திரும்பப்பெறவும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் அரசுக்கு தரவேண்டிய பணத்துக்கு பதிலாக பங்குகளை தர முடிவு செய்துள்ளது. இந்த பங்குகளின் மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது.பங்குகளை அரசுக்கு விற்றதன் மூலம் வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் மிகப்பெரிய பங்கு வைத்திருக்கும் நபராக அரசு மாறியுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கள் அரசுக்கு விற்கப்பட்டு அவை ஈக்விட்டி பங்குகளாக மாறும் நிலையில் வோடஃபோன் நிறுவன பங்குகளின் ஒரு பங்கின் விலை 10 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை 7 ரூபாய் என்ற அளவில் மும்பை பங்குச்சந்தையில் இருந்தது. செப்டம்பர் மாத தரவுகளின்படி வோடபோன் நிறுவனத்தின் கடன் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கடன் மட்டும் 15 ஆயிரத்து 80 கோடி ரூபாயாக உள்ளது.