உங்கள் கார்டுகளில் “ஆட்டோ டெபிட்” கட்டணங்களை செயல்படுத்தி இருக்கிறீர்களா? இதக் கொஞ்சம் படிங்க !
உங்கள் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில், ஆட்டோ டெபிட் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரா நீங்கள், கொஞ்சம் கவனமாக இதை படியுங்கள். அக்டோபர் 1 முதல் உங்கள் பரிவர்த்தனைகள் சில செயல்படாமல் போக வாய்ப்பிருக்கிறது. ரிசர்வ் வங்கி (RBI) அமல்படுத்தி இருக்கும் புதிய விதிகளால் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் 5000 ரூபாய்க்கு மேலான ஆட்டோ டெபிட் கட்டணங்களைப் பிடித்தம் செய்ய வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
அதே போல, தொலைபேசிக் கட்டணங்கள், OTT தளங்களில் வீடியோ ஸ்ட்ரீமிங், தொலைக்காட்சி சேவைகள் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளுக்கான பில்களை தொடர்ச்சியாக மாதந்தோறும் ஆட்டோ – டெபிட் செய்வதற்கான முன்கூட்டிய பரிவர்த்தனை செயல்முறைகளை அமைத்தவர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதி அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பு செப்டம்பர் 30 இல் முடிவடைவதால் அக்டோபர் 1 முதல் பணம் செலுத்துவது தோல்வி அடையக்கூடும்.
புதிய விதிகளின்படி உங்கள் ஆட்டோ டெபிட் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னதாக வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் ஒரு அறிவிப்பை உங்களுக்கு அனுப்ப வேண்டும், கோரிக்கையை நீங்கள் அங்கீகரித்தால் மட்டுமே பரிவர்த்தனை அனுமதிக்கப்படும், பரிவர்த்தனைக்கு முன் வங்கிகள் எஸ்எம்எஸ் மற்றும் இ மெயில் மூலம் வாடிக்கையாளருக்கு இந்த அறிவிப்பை அனுப்பும். இந்த அறிவிப்பில் வணிகரின் பெயர், பரிவர்த்தனை தொகை, டெபிட் தேதி, பரிவர்த்தனையின் குறிப்பு எண் அதன் விவரங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் அந்தக் குறிப்பிட்ட பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளவோ, நிராகரிக்கவோ முடியும், ஆட்டோ டெபிட் செயல்முறையை பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றும் வகையில் இந்த விதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது, எச்.டி.எஃப்.சி உட்பட பல்வேறு வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோ டெபிட் கட்டணங்களுக்கான விதி மாற்றம் குறித்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய விதியானது எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகள், ஆயுள் காப்பீடுகள், இதர காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் 5000 ரூபாய்க்கு மேலான பிற ஆட்டோ டெபிட் செயல்முறைகளைப் பாதிக்காது.
இந்த விதியானது ஏப்ரல் 1, 2021 முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்தது, ஆனால், பல வங்கிகள் இந்த விதிமுறைக்கு இணங்காததால் ரிசர்வ் வங்கி, விதிமுறைக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நீட்டித்திருந்தது, காலக்கெடு முடிவடையும் சூழலில் அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. ஆட்டோ டெபிட் செயல்முறைகளை உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் செயல்படுத்தி இருக்கிறீர்களா? கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.