நஷ்டத்தில் BSNL நிறுவனம் – ரூ.44.720 கோடி மானியம் வழங்கும் மத்திய அரசு..!!
நஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)க்கு, மத்திய அரசு ரூ.44.720 கோடி மானியம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம்:
“4G ஸ்பெக்ட்ரம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் BSNL-ன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான மூலதன உட்செலுத்தலுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு தன்னார்வ ஓய்வு திட்டத்துக்காக ரூ.7,443.57 கோடியும், ஜிஎஸ்டி செலுத்துவதற்கான மானியமாக ரூ.3,550 கோடி கூடுதல் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கு சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) ஆதரவு BSNL க்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு:
2022-23-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை அரசாங்கம் நடத்தும் என்றும், இது 2022-23 நிதியாண்டில் தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களால் 5G சேவைகளை வெளியிடுவதற்கு உதவும் என்றும் தெரிவித்திருந்தார்.
“தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் 2022-23-க்குள் 5G மொபைல் சேவைகளை வெளியிடுவதற்கு வசதியாக 2022-இல் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் சேவை பெருக்கத்தை செயல்படுத்த, உலகளாவிய சேவை ஆண்டு வசூலில் 5 சதவீதம் ஒதுக்கப்படும் எனவும் , தொலைதூரப் பகுதிகள் உட்பட அனைத்து கிராமங்களிலும் ஆப்டிகல் ஃபைபர் அமைப்பதற்கான ஒப்பந்தம் 2022-23 ஆம் ஆண்டில் பிபிபி மூலம் பாரத்நெட் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.