சுதந்திர தின உரையில் “தேசத்தின் நிலையும்”, அதன் உண்மை நிலையும் – ப.சிதம்பரம் அவர்களின் எழுத்துக்களிலிருந்து…
உலகத் தலைவர்களின் உரைகளில், அதிகம் எதிர்பார்க்கப்படுகிற ஒன்று, அமெரிக்க ஜனாதிபதி ஆண்டுதோறும் அமெரிக்க காங்கிரசில் ஆற்றும் “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” உரையாகும், காரணம், அமெரிக்காவின் கொள்கைகள் உலகின் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் ஏற்படுவதுதான். அதேபோல, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் ஆற்றும் உரை, உலகத்தால் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படவில்லை என்றாலும், அதன் மீதான கணிசமான ஆர்வம் உண்டு. சுதந்திர தின கொண்டாட்டம் என்பது குடியரசு தின அணிவகுப்பைப் போல வண்ணமயமானது இல்லை, ஆனால் சுதந்திர தின உரையின் சாராம்சம் அணிவகுப்புகளையும், பட்டொளி வீசும் கடந்த காலத்தையும் ஈடு செய்து விடுகிறது.
செங்கோட்டையில் இருந்து வரும் சுதந்திர தின உரை ஜவஹர்லால் நேருவின் காலத்திலிருந்தே ஒரு சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. நான் அதை தேசத்தின் உரை என்று சொல்கிறேன். திரு நேரு அவர்களின் இந்த ஒரு பாரம்பரியத்தை திரு நரேந்திர மோடி நிராகரிக்கவும் ஒழித்துவிடவும் முயற்சிக்கவில்லை, இருப்பினும் ஆகஸ்ட் 15 அன்று திரு மோடி அவர்களின் உரைகளை பொறுத்தவரை பெரிதாக கருத்து குறிப்புடைவது போன்று ஒன்றும் இருப்பதில்லை, மேலும் அவ்வுரைகள் எதிர்க்கட்சியினரை ஏளனம் பேசும் அவரது முத்திரை பேச்சை தவிர்த்துவிட்டால் எஞ்சும் தேர்தல் பேரணி பேச்சுப்போன்று தான் இருக்கிறது.
இப்போது, திரு மோடியின் எட்டாவது சுதந்திர தின உரையின் சாராம்சத்திற்கு வருவோம், இது முக்கியமாக அவரது அரசின் “சாதனைகளை” திரும்பக் கூறும் ஒன்றாகவே இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, ஊடகங்களில் அரிதாக சிலர் மட்டுமே அவரது அறிவிப்புகளையும், சாதனைகளையும் (அமெரிக்க ஊடகங்களில் செய்வது போல்) உண்மையானதா என்று சரிபார்க்கத் தயாராக இருந்தனர். பேராசிரியர் ராஜீவ் கௌடா தலைமையிலான ஒரு இளம் குழு அந்த வேலையைச் செய்திருக்கிறது, அவற்றில் சில முடிவுகளை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
“இந்தியர்களாகிய நாம் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறோம். தொற்றுநோயை எதிர்த்துப் போராட நமக்கு முன் பல்வேறு சவால்கள் இருந்தன, ஒவ்வொரு முனையிலும் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இன்று நாம் முழுவதும் சுய சார்பு கொண்டவர்களாக மாறிவிட்டோம், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நடக்கிறது.” – (பிரதமர் உரையிலிருந்து)
இந்தியாவின் அதிகாரப்பூர்வ பெருந்தொற்று இறப்பு எண்ணிக்கை 4,33,622 இது உலக நாடுகளில் மூன்றாவது மிக அதிக எண்ணிக்கை, ஆனால் உண்மையான இறப்பு எண்ணிக்கை பல சுயாதீனமான ஆய்வுகளால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிபுணர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டால் இறப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது, அதாவது இந்தியாதான் உலகில் அதிகளவில் இறப்புகளைக் கண்ட நாடு.
இரண்டாவது அலையின் போது, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்ட்டிலேட்டர்கள், கோவிட் சோதனைக் கருவிகள் போன்றவற்றுக்காக 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியை நாம் நாடினோம், உதவிகளை ஏற்றுக்கொண்டோம். தடுப்பூசிகள் குறித்த, தனது முந்தைய தற்பெருமையை மெதுவாக இந்த அரசு புதைத்து விட்டது, ஏற்றுமதிகளை நிறுத்திக் கொண்டது (இது பல சிறிய நாடுகளை, மிகப்பெரிய தடுப்பூசி தட்டுப்பாட்டில் தள்ளியது), நம்முடைய அரசு தடுப்பூசிகளுக்காக ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் கெஞ்சியது. முதலாவதாக, தடுப்பூசி விஷயத்தில் நாம் சுயசார்பை எட்டிவிட்டோம் என்று சொல்வதற்கான எந்தத் தகுதியும் இல்லை.
அதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் ஸ்புட்னிக் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டது, ஏனைய உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் அவர்களின் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. போதுமான விநியோகம் இல்லாமல் நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் தொடர்ந்து தடைபட்டுள்ளது. இதை நான் எழுதும்போது, இந்தியாவில் 44,01,02,169 நபர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 12,63,86,264 நபர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 2021 டிசம்பர் இறுதிக்குள் (95-100 கோடி) ஒட்டுமொத்தமாக வயது வந்தவர்களுக்கான முழுமையாகத் தடுப்பூசி போடும் இலக்கு அநேகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
“இந்தியா 80 கோடி பேருக்கு உணவு தானியம் வழங்கியுள்ளது, உலகம் இதைப் பற்றி விவாதித்து வருகிறது”. (பிரதமர் உரையிலிருந்து)
இந்தியாவில் சுமார் 27 கோடி குடும்பங்கள் உள்ளன (ஒரு குடும்பத்திற்கு சராசரியாக 5 உறுப்பினர்கள்). 80 கோடிப் நபர்களில், நபர் ஒருவருக்கு 5 கிலோ என்ற விகிதத்தில் உணவு தானியம் வழங்கப்பட்டிருந்தால், அது இந்திய உணவுக் கழகத்தின் (FCI) விநியோகத்திற்காக வெளியில் எடுக்கப்படும் கணக்கில் பிரதிபலிக்க வேண்டும். 2012-13 ஆம் ஆண்டில் 66 மில்லியன் விநியோகத்திற்கு வெளியில் எடுக்கப்பட்டது (அரிசி மற்றும் கோதுமை), 2018-19-ல் இது 62 மில்லியன் டன்களாகவும், 2019-20-ல் 54 மில்லியன் டன்களாகவும் குறைந்துள்ளது. 2020-21 பெருந்தொற்று ஆண்டில், இது 87 மில்லியன் டன்களாக அதிகரித்தது. இதன் பொருள், திட்டமிடப்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் இலவச தானியம் வழங்கப்படவில்லை என்பதுதான். அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஒரு கணக்கெடுப்பில், நாடு முழுதும் 27 சதவீதக் குடும்பங்கள் மட்டுமே 5 கிலோ திட்டத்தின் (கரீப் கல்யாண் அன்ன யோஜனா) கீழ் முழுமையாகப் பயன் பெற்றதாகத் தெரிவிக்கிறது. உலகளாவிய பட்டினிக் குறியீட்டில், இந்தியா 107 நாடுகளில் 94 ஆவது இடம் பிடித்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
‘அனைவருக்கும் கழிப்பறைகள்’ என்ற இலக்கு எட்டப்பட்டது போல், மற்ற அனைத்து திட்டங்களையும் முடிக்க 100 சதவீத நமது தேவை. (பிரதமர் உரை)
‘அனைவருக்கும் கழிப்பறைகள்’ என்பது ஒரு வெற்று கூச்சல், கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கழிப்பறைகள் இல்லவே இல்லை அல்லது சிறு கிடங்காக பயன்படுத்தப்படுகின்றன. தேசிய சுகாதார கணக்கெடுப்பு-5 ன் படி, ஐந்து மாநிலங்களில் உள்ள கிராமப்புற மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. 2018 ஆம் ஆண்டில் தேசிய புள்ளியியல் அமைப்பு நடத்திய ஒரு கணக்கெடுப்பில், கிராமப்புறங்களில் உள்ள 28.7 சதவீத குடும்பத்தினருக்குக் கழிப்பறை வசதி இல்லை என்றும், 32 சதவீதம் பேர் திறந்தவெளிப் பழக்கத்தையே பின்பற்றுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில், நாட்டில் பல ஆக்ஸிஜன் ஆலைகள் இருக்கும். (பிரதமர் உரை)
2020 அக்டோபரில், அரசு முடிவு எடுத்த எட்டு மாதங்களுக்குப் பிறகு, அரசு மருத்துவமனைகளில் PSA ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ ஏலம் கோரப்பட்டது. ஏப்ரல் 18, 2021 அன்று, சுகாதார அமைச்சகம் ஒரு ட்வீட் செய்தது, அதாவது முன்மொழியப்பட்ட 163 ஆக்ஸிஜன் ஆலைகளில் (பின்னர் மேலும் சேர்க்கப்பட்டன), 33 ஆலைகள் மட்டுமே இதுவரை நிறுவப்பட்டுள்ளன. ஸ்க்ரோல் என்ற ஊடக அமைப்பு, மேற்கொண்ட ஆய்வில் ஐந்து ஆக்ஸிஜன் ஆலைகள் மட்டுமே செயல்படுகின்றன என்பது கண்டறியப்பட்டது.
நவீன உள்கட்டமைப்பிற்காக ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். (பிரதமர் உரையிலிருந்து)
ஆகஸ்ட் 15, 2019 அன்று, பிறகு ஆகஸ்ட் 15, 2020 அன்றும் இதே இடத்தில் இதே அறிவிப்பை அவர் வெளியிட்டதை யாரும் நினைவில் வைத்திருக்கமாட்டார்கள் என்று பிரதமர் நினைத்திருக்கலாம். இதை அவர் ஆகஸ்ட் 15, 2022 அன்று மீண்டும் கூட வெளியிடலாம். உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டமானது ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 லட்சம் கோடி கண்ணுக்குத் தெரியாத விகிதத்தில் வளர்ந்து வருகிறது என்பதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் அது சோர்வை உண்டாக்குவதாக இருக்கும் அதனால் நான் இத்துடனே நிறுத்திக் கொள்கிறேன்.
உண்மைகள் எளிமையானவை, சலிப்பூட்டக்கூடியவை. போலிகள் அற்புதமானவை. உண்மைகளை சரிபார்ப்பது ஆபத்தானது ஆனால் அற்பமான போலிகள் பரபரப்பா கிறது. உங்கள் நாட்டை எது மகத்தானதாக மாற்றும், உங்களுடைய நாளை எது ஒளிமயமாக மாற்றும் என்பதை நீங்களே தேர்வு செய்யலாம்.