கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பாக இந்திய அரசு நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் அதிகமான அளவில் முதலீடு செய்து இருப்பதால் இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சியை இந்திய அரசால் தடை செய்ய இயலாது என்றும், இதனால் குறிப்பிட்ட சந்தை முதலீட்டை கொண்டு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்க முடியாத சூழலில், மத்திய அரசு இரண்டுக்கும் இடையிலான ஏதாவது ஒரு நிலைப்பாட்டை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகின்றது.
கிரிப்டோகரன்சியை அதிகாரபூர்வ முதலீடாக அறிவித்துள்ள நாடுகளில் கிடைத்த சாதக பாதக அம்சங்கள், இந்தியர்களால் செய்யப்பட்ட முதலீடுகள், ரிசர்வ் வங்கியில் கிரிப்டோகரன்சி மீதான பார்வை, ஆகியவை மத்திய நிதி அமைச்சகத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி முதலீட்டின் மீது வரிவிதிப்பு குறித்து முடிவுகளை எடுக்கும் முக்கிய ஆவணங்களும் நிதி அமைச்சகம் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “கிரிப்டோகரன்சி வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்த தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத் திறனை எவ்வாறு அதிகரிக்க உதவும் என்பதை பார்க்க வேண்டும்” என்றார்.