ஒரே காலாண்டில் ரூ.514 கோடி லாபம்
டாபர் இந்தியா: முதல் காலாண்டு லாப உயர்வு – கிராமப்புற வளர்ச்சி முன்னணி
இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான டாபர் இந்தியா, 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1FY26) நிகர லாபத்தில் 2.8% உயர்வுடன் ₹513.9 கோடி ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ₹500 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. கிராமப்புற சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக நகர்ப்புற தேவையை மிஞ்சியதால் இந்த வளர்ச்சி சாத்தியமானது.
நிகர விற்பனை 1.7% உயர்ந்து ₹3,404.6 கோடி ஆனது. இது கடந்த ஆண்டு ₹3,349.1 கோடியாக இருந்தது. வட்டி, தேய்மானம், வரிக்கு முந்தைய லாபம் (PBIDT) 3.5% அதிகரித்து ₹811.4 கோடியாக உள்ளது.
டாபர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா கூறுகையில், “எங்கள் தயாரிப்புப் பிரிவில் 95% முழுவதும் வலுவான சந்தைப் பங்கு ஆதாயங்கள் இந்தச் செயல்பாட்டிற்கு அடித்தளமாக அமைந்தன. இது எங்கள் நுகர்வோரின் நம்பிக்கை, எங்கள் பிராண்டுகளின் நிலைப்புத்தன்மை, சவால்களை எதிர்கொண்டு எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செயல்படும் எங்கள் குழுக்களின் சுறுசுறுப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது” என்றார்.
கிராமப்புற வளர்ச்சி நகர்ப்புற வளர்ச்சியை மதிப்பு, அளவு இரண்டிலும் 390 அடிப்படைப் புள்ளிகள் (bps) மிஞ்சியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இக்காலாண்டில் கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சி இடைவெளி குறைந்துள்ளது. இது நகர்ப்புற நுகர்வில் மெதுவான ஆனால் நிலையான மீட்சியை சுட்டிக்காட்டுகிறது. மார்ச் காலாண்டில் இந்த இடைவெளி மதிப்பு அடிப்படையில் 460 bps, அளவு அடிப்படையில் 500 bps ஆக இருந்தது.
இக்காலாண்டில் டாபர் சுமார் 10,000 கிராமங்களுக்கு தனது கிராமப்புற வணிகத்தை விரிவுபடுத்தியது. இதன்மூலம் மொத்த கிராமப்புற உள்ளடக்கம் 1.33 லட்சம் கிராமங்கள், 1.52 மில்லியன் விற்பனை நிலையங்களாக அதிகரித்துள்ளது.
சீரற்ற மழைப் பொழிவு நிறுவனத்தின் கோடைக்கால தயாரிப்புகளான பானங்கள், குளுக்கோஸ் விற்பனையை பாதித்தது. பருவகாலத் தயாரிப்புகளைத் தவிர்த்து, டாபர் தனது வணிகத்தில் 7% வளர்ச்சியையும், பருவகாலமற்ற விற்பனை அளவுகளில் 3.5% வளர்ச்சியையும் பதிவு செய்தது.
