செபியின் முன்னாள் தலைவருக்கு தனியார் நிறுவனத்தில் முக்கிய பதவி
பங்குச்சந்தை விவகாரங்களை நிர்வகிக்கும் அமைப்பாக செபி திகழ்கிறது. இந்த அமைப்பின் தலைவராக யூ.கே. சின்ஹா இருந்தார். தற்போது அவர் நிப்பான் இந்தியா லைஃப் அசட் மேனேஜ்மண்ட் என்ற நிறுவனத்தின் சுதந்திர இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் வரும் 1ம் தேதி முதல் அந்த நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குநராக செயல்பட இருக்கிறார். 1976ம் ஆண்டு பீகார் கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான சின்ஹா,மத்திய அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார். 30 ஆண்டுகளாக அரசின் நிதியமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளில் பங்களித்த அவர் 2011முதல் 2017ம்ஆண்டுவரை செபியின் தலைவராக இருந்தார். யுடிஐ அசட்நிறுவனத்தின் தலைவராக இருந்த சின்ஹா,பரஸ்பர நிதிய சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர் ஆவார்.இவர் செபியில் பதவியில் இருந்தபோது பல்வேறு மாற்றங்களை செய்ததாக கூறியுள்ள நாம் நிறுவனம், சின்ஹாவின் வழிகாட்டுதல்களில் தங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். நிபான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்தியளவில் 4வது மிகப்பெரிய நிதியாகும். இந்த அமைப்பின் சொத்து மதிப்பு மட்டும் 2.73 லட்சம் கோடி ரூபாயாகும்,இதே சின்ஹாதான் என்டிடிவி நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். என்டிடிவி நிறுவனத்தை அண்மையில் அதானி வாங்கிப்போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.