கோவாக்சின், உலகளாவிய பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெறுமா?
ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்க வேண்டுமென கடந்த ஏப்ரல் மாதம் கேட்டுக்கொண்டது, கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய உலக சுகாதார நிறுவன தொழில்நுட்பக் குழுவினர் “உலகளாவிய இந்த மருந்தின் பயன்பாட்டுக்கு மேலதிக விளக்கங்கள் வேண்டும், அதுவரை கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது” எனவும் கூறியது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாடு பட்டியலுக்கான கோவாக்சின் பற்றிய தரவை மதிப்பீடு செய்வதற்காக தொழில்நுட்பக் குழுவினர் செவ்வாய் அன்று கூடினர். இந்த வார இறுதிக்குள் கோவாக்சின் உற்பத்தியாளர்களிடமிருந்து தங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அனைத்தும் சரியாக நடந்தால், குழு திருப்தி அடைந்தால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை எதிர்பார்க்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் மார்க்கிரட் ஹாரிஸ் கூறினார்.
கோவிட் 19 க்கு எதிராக கோவாக்சின் 77.8 சதவீதம் செயல்திறனையும்,டெல்டா வைரஸுக்கு எதிராக 65.2 சதவீதம் பாதுகாப்பையும் நிரூபித்துள்ளது. ஜூன் மாதத்தில் கோவாக்சின் செயல்திறன் பற்றிய இறுதிப் பகுப்பாய்வு மூன்றாம் கட்ட சோதனையில் முடிந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை குழு மதிப்பீட்டை முடித்து தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டு பட்டியலை வழங்கலாமா என்பது குறித்து இறுதி முடிவுக்கு வருவோம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
கோவாக்சின் பற்றிய நல்ல தகவலுக்காக நாமும் நவம்பர் 3-ஆம் தேதி வரை காத்திருப்போம்.