முதற் காலாண்டு அலசல்: அரசாங்கத்தின் வரி வசூல் 86% உயர்ந்திருக்கிறது!
ஒரு அரசு எதற்காக அதன் குடிமக்களிடமிருந்து வரி பெறுகிறது? வரிகளை அரசாங்கம் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறது. அவற்றுள் சில பொதுக் கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவது என அடங்கும்.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அரசின் மொத்த வரி வசூல் ₹55.57 லட்சம் கோடி. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 86 % அதிகரிப்பு. மொத்த தொகையில், நிகர நேரடி வரி வசூல் (direct tax) ₹2.46 லட்சம் கோடி, மறைமுக வரி (indirect tax) ₹3.11 லட்சம் கோடி.2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர நேரடி வரி வசூல் ₹2,46,519.82 கோடி ரூபாய். இது முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ₹1,17,783.87 கோடியாக இருந்தது, இது 109.3 % வளர்ச்சியைக் குறிக்கிறது என்று மக்களவையில் (Lok Sabha) கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமான பதிலில் இணை நிதியமைச்சர் (Minister of State for Finance) பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார். 2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர மறைமுக வரி வசூல் ₹3,11,398 கோடி, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ₹1,82,862 கோடியாக இருந்தது; 70.3%வளர்ச்சியைக் குறிக்கிறது.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சவுத்ரி, வரியை கட்டாமல் ஏமாற்ற நினைப்போரின் மேல் வருமான வரித் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். அவ்வாறு செய்பவரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், தேடல்கள், ஆய்வுகள், விசாரணைகள் மற்றும் வருமானத்தை மதிப்பீடு செய்தல், வரி விதிப்பது, வட்டி, அபராதம் குற்றவியல் நீதிமன்றங்களில் புகார்கள் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் (பொருந்தக்கூடிய இடங்களில்).
கறுப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்-Undisclosed Foreign Income and Assets) மற்றும் வரி விதித்தல் சட்டத்தின் கீழ் (Imposition of Tax Act, 2015) 107-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மே 31, 2021 வரை, சட்டப்படி, ₹8,216 கோடி வரவேண்டியிருக்கிறது. சுமார், ₹8,465 கோடி வருமானம் வரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது மற்றும் HSBC money laundering வழக்குகளில் ₹1,294 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ICIJ (International Consortium of Investigative Journalists) வழக்குகளில் சுமார் ₹11,010 கோடி ரூபாய் வெளியிடப்படாத வருமானம் கண்டறியப்பட்டுள்ளது.பனாமா பேப்பர்ஸ்சில் ₹20,078 கோடியும், பாரடைஸ் பேப்பர்களில் ₹246 கோடியும் வெளியிடப்படாத வரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.