அதிக ஊக்கத்தொகை கோரும் ” IT ஹார்ட்வேர்” உற்பத்தியாளர்கள் ! மேட்-இன்-இந்தியா” திட்டம் புத்துணர்வு பெறுமா?
அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான தகவல் தொழில்நுட்பத்துறை வன்பொருள் (ஹார்ட்வேர்) உற்பத்தியாளர்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம், ஒப்பந்த அடிப்படையிலான அயல்நாட்டு மடிக்கணினி மற்றும் கைக்கணினி பிராண்டுகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் கணிசமான ஊக்கத்தொகை அதிகரிப்பும், திட்டத்திற்கான கால நீட்டிப்பையும் கோரியுள்ளனர். சீனா மற்றும் தைவானில் இருக்கும் தங்கள் உற்பத்தி மையங்களில் இருந்து லேப்டாப் மற்றும் டேப்லட்டுகளை வரியேதும் இல்லாமல் இறக்குமதி செய்வது மலிவானது என்று பன்னாட்டு லேப்டாப் நிறுவனங்கள் கருதுகின்றன. இவற்றை இந்தியாவில் தயாரிக்கவோ, ஏற்றுமதி செய்யவோ குறைந்த அளவிலான ஊக்கத்தொகை கிடைப்பதும், உள்நாட்டில் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான சூழல் இல்லாமல் இருப்பதுமே இதற்கான காரணம்.
தகவல் தொழிநுட்ப ஹார்டுவேர் மற்றும் மொபைல் கருவிகளைத் தயாரிக்கும் ஏறக்குறைய 20 நிறுவனங்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்த அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தனர். டெல், ஹெச்பி, ஆப்பிள், டிக்சன், ஆப்டிமஸ், மைக்ரோமேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகையை இரட்டிப்பாக்குமாறு அரசை இந்த நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த ஊக்கத்தொகை, தயாரிப்பு ஆண்டைப் பொறுத்து 1 சதவீதம் முதல் 4 சதவீதமாகவும், நிறுவனங்களின் அதிகரித்த நிகர விற்பனையில் (சராசரியாக 2.5 சதவீதம்) ஐந்து சதவீதமாகவும் இது இருக்கிறது, மேலும், திட்ட காலத்தை நான்கில் இருந்து எட்டு ஆண்டுகளாக உயர்த்தவும் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. திட்டத்தின் முதல் நிதியாண்டான 2021-22ல் ஐந்து மாதங்கள் ஏற்கனவே முடிந்து விட்டதால், அவர்கள் ஒரு வருட கால நீட்டிப்பைக் கோருகிறார்கள், அதாவது திட்டம் 2022-23 முதல் தொடங்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அவர்கள் செய்ய வேண்டிய கூடுதல் முதலீட்டை குறைக்க வேண்டும் என்றும் சில நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மொபைல் கருவிகள் போன்ற பிற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளில் செய்து முடிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியின் போது சுங்கத் வரி செலுத்த வேண்டியிருக்கிறது, ஆனால், இந்தியா 1997 இல் ஐ.டி.ஏ-1 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள காரணத்தால், லேப்டாப் போன்ற முழுமையாக வடிவமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய பூஜிய சுங்க வரி யில் அனுமதி அளித்துள்ளது. உதிரிபாக உற்பத்தியாளர்கள், சிறப்பு மின்னணு உதிரிபாக நிதி என்ற பெயரில் இந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் ஒரு அமைப்பை உருவாக்கி குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) இது பயன்பட வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள், என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல வட்டிக்கான மானியம் மற்றும் பிற ஊக்கத் தொகைகளையும் இந்த நிறுவனங்கள் கேட்டுள்ளனர், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் அவர்கள் உலகளவில் போட்டியிடமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
ஊக்கத்தொகை திட்டமானது இந்த நிறுவனங்களின் ஏற்றுமதியின் மீது முக்கிய கவனம் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும், ஏனெனில் உள்நாட்டு சந்தையின் திறன் ஏற்றுமதிக்குப் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் கூறினர். இந்தியா செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் லேப்டாப் மற்றும் டேப்லெட் பிரிவுகளின் இறக்குமதியானது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 2020-21 நிதியாண்டில் ₹ 6000 கோடியாக இருந்து, 2021-22 ஆம் நிதியாண்டில் ₹ 10,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவில் லேப்டாப்களுக்கான மொத்த சந்தை மதிப்பீடு 4.85 பில்லியன் டாலராக இருந்தது என்று சமீபத்திய EY நிறுவன ஆய்வு ஒன்று தெரிவித்தது. சீன இறக்குமதிகளே சந்தையில் ஆதிக்கம் செலுத்தின, அவற்றின் சந்தை மதிப்பு $3.65 பில்லியன் ஆகும்.
ஊக்கத்தொகை பெரும் நிறுவனங்களில் ஒன்றின் உயர் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி “மடிக்கணினிகளில் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான சந்தை இடைவெளி 8.5 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக இருக்கிறது. வழங்கப்படும் ஊக்கத்தொகையானது இந்த இடைவெளியைக் குறைக்கவும், “மேட் இன் இந்தியா” திட்டத்தை கவர்ச்சிகரமாக்கவும் உதவாது. மேலும், இந்தியாவில் உதிரிபாகங்களுக்கான உள்கட்டமைப்பு இல்லை, அதற்கு அதிக காலமெடுக்கும். எனவே உள்ளூர் உதிரிபாகங்களின் வலுவான அடித்தளத்தை உருவாக்க நான்கு ஆண்டுகளுக்கு ஒரு ஊக்கத்தொகை என்பது மிகக் குறைந்த அளவாகும்.”
தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர்களுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான இலக்கை மையமாக வைத்து ஒரு திட்டத்தை அரசு முன்னதாக ஒன்றிணைத்திருந்தது.
2021 பிப்ரவரியில், இத்திட்டத்தின் கீழ் அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் ரூ.326,000 கோடி மதிப்பிலான உற்பத்தி செய்யப்படும் என்றும், இதில் 75 சதவீதம் ஏற்றுமதியில் இருந்து வரும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கணித்திருந்தது. ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பில், இத்திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 14 நிறுவனங்கள் (பன்னாட்டு மற்றும் உள்நாட்டு) அளித்த உறுதிமொழிகளை அறிவித்தது, இதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளில் திட்டத்தின் கீழ் வரும் மொத்த உற்பத்தி மதிப்பு ₹ 1,60,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அரசாங்கத்தின் முந்தைய கணிப்பில் இருந்து பாதியாகக் குறைந்திருக்கிறது. ஏற்றுமதியும் கூட மொத்த உற்பத்தி மதிப்பில் 37 சதவீதமாகத்தான் இருக்கும், இது முந்தைய இலக்கில் இருந்து மிகப்பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டால், “மேட்-இன்-இந்தியா” திட்டம் புத்துணர்வு பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.