12,410 கோடி நிதியுதவி, பொருளாதார மீட்புக்குக் கைகொடுத்த IFC !
பெருந்தொற்றுக் காரணமாக, பொருளாதார சரிவை சரிசெய்யும் பொருட்டு உலக வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச நிதிக் கழகம் (IFC) மிகப்பெரிய அளவில் இந்தியாவில் முதலீடு செய்திருக்கிறது, உலகளவில் தன் மிகப்பெரிய வாடிக்கையாளரான இந்தியாவில் ஜூன் 2021 வரை 1.7 பில்லியன் டாலர் (12,410 கோடி) அளவில் முதலீடு செய்திருக்கிறது. கடந்த 12 மாதங்களில் இது அதன் முதலீட்டளவில் சென்ற ஆண்டைவிட 51% அதிகரிப்பாகும், மூன்றாம் உலக நாடுகளுக்கான மிகப்பெரிய வளர்ச்சிக் கடன் வழங்கும் நிறுவனமான சர்வதேச நிதிக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறது.
பெருந்தொற்றுக்குப் பிறகு தெற்காசியாவின் மொத்த முதலீட்டு மதிப்பான 3.8 பில்லியன் டாலரில் இது ஏறத்தாழ 50% ஆகும், சர்வதேச நிதிக் கழகத்தின் ஆசியா -பசிபிக் மண்டலத் துணைத்தலைவர் அல்போன்ஸா கார்சியா மோரா நேற்றைய செய்திக்குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 2020 க்குப் பிறகு நிகழ்ந்த உலகளாவிய பெருந்தொற்றுத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச நிதிக் கழகமானது, தெற்காசியாவில் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையிலும், தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு உதவும் வகையிலும் இந்த முதலீடுகளைச் செய்திருக்கிறது. மேலும், மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குதல், தடுப்பூசி விநியோகம், மறுசுழற்சி எரிசக்தி, குறைந்த விலையிலான வீடுகள் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்த முதலீடுகள் பயனளித்திருக்கின்றன, பெருந்தொற்றுக் காலத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான சிறு-குறு தொழில்களை மீட்டெடுக்கவும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
மிகப்பெரிய அளவிலான சமூக, பொருளாதார சீர்கேடுகளை உருவாக்கியுள்ள பெருந்தொற்றுப் பரவியதிலிருந்து, சர்வதேச நிதிக் கழகமானது, ஜூன் 2021 வரை தெற்காசியாவில் குறுகிய கால நிதியாகவும், தொகுப்பு நிதியாகவும் 3.8 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது, இதன் பயனாக தெற்காசிய மண்டலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14.9 பில்லியன் டாலருக்கும் அதிகமான தங்களது முதலீட்டு அளவானது இந்த பகுதியில் செழுமையுடன், உள்ளார்ந்த, தாக்குப்பிடித்து மீளக்கூடிய பொருளாதார மீட்சியை உருவாக்கி இருப்பதாக மோரா கூறினார். தெற்காசிய மண்டலத்தில் சுற்றுச் சூழல் தொடர்பான பணிகளுக்கு 353 மில்லியன் டாலர்களையும், போர்ச்சூழல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்கென 490 மில்லியன் டாலர்களையும் சர்வதேச வளர்ச்சிக் கூட்டமைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிதிக் கழகமானது, ஏற்கனவே உயிர்காக்கும் மருந்துகள் தயாரிப்பு, உயிர்காப்புக் கருவிகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான நிதி முதலீடுகளையும், அறிவுரைகளையும் வழங்கி இருக்கிறது என்றும் மண்டலத்தில் தனியார் துறையானது அதன் செயல்பாடுகளை உறுதி செய்யவும், வேலை வாய்ப்புக்களைத் தக்க வைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கவனம் செலுத்தும் என்றும் மோரா குறிப்பிட்டார்.
“பெருந்தொற்றின் தாக்கமானது இந்த மண்டலத்தின் தட்பவெப்ப நிலைப் பாதிப்புகளோடு இணைந்து கொண்டிருக்கும் சூழலில் எதிர்காலத்தில் அதிர்ச்சிகரமான விளைவுகளைத் தடுத்துத் தாக்குப்பிடித்து மீளக்கூடிய, இணக்கமான தீர்வுகள் கூட்டாக எட்டப்பட வேண்டும்” என்று தெற்காசிய மண்டலத்தின் புதிய இயக்குனர் ஹெக்டர் கோமெஷ் அங் தெரிவித்திருக்கிறார்.
தெற்காசியா உலகளவில் விரைவாக வளர்ந்து வரும் பகுதியாகும், காலநிலை மாற்றங்கள் காரணமாக 2050 வாக்கில் இந்த மண்டலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 1.8 % அளவு குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது, ஒருவேளை முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் இது 2100 ஆம் ஆண்டில் 8.8 % ஆக அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. இந்த மண்டலத்தில் 2030 வரைக்குமான காலநிலை மாற்றங்கள் தொடர்பான முதலீட்டுத் தேவையானது 3.4 ட்ரில்லியன் டாலராக இருக்கும் என்றும் ஹெக்டர் தெரிவித்திருக்கிறார்
உலக வங்கிக் குழுமத்தின் காலநிலை மாற்றத்துக்கான செயல் திட்டத்தின் (2021-25) கீழ், சர்வதேச நிதிக் கழகம், ஜூலை 1, 2025 க்குள் பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்துப் புதிய துறை நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க உறுதியேற்றுள்ளது, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக காலநிலை மாற்றத்திற்கான தேவைகளுக்காக 3 % நிதித் திரட்டை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது என்பதை நாம் இங்கு நினைவுக்கூறவேண்டும். சர்வதேச நிதிக் கழகம் வளர்ந்து வரும் சந்தைகளில், குறிப்பாகத் தனியார் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்தும் மிகப்பெரிய உலகளாவிய நிறுவனமாகும், இது 100 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 2020 ஆம் நிதியாண்டில், மேற்குறிப்பிட்ட சந்தைகளில் தனியார் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் 22 பில்லியன் டாலர்களை சர்வதேச நிதிக் கழகம் முதலீடு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.