விரைவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு…
கடந்தாண்டு மே மாத்ததில் இருந்து அசுர வேகத்தில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து வந்த சூழலில் இந்தமாதத்துடன் கடன்கள் மீதான வட்டி விகிதம் உயர்வு நிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதா வேண்டாமா என்பது குறித்த நிதி கொள்கை கூட்டம் இம்மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதன் முடிவில் கடன்களுக்கான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தற்போது வரை கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 விழுக்காடாக உள்ளது. இந்த வார இறுதிக்குள் இது 6.75%ஆக உயர இருக்கிறது.என்னதான் மத்திய ரிசர்வ் வங்கி முயற்சித்தாலும் இந்தியாவின் பணவீக்கம் 6 விழுக்காட்டுக்குள் வரவில்லை. எனினும் வருங்காலத்தில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிக்கின்றனர். அதிகபட்ச வட்டி விகிதம் உயர்வுக்கும், விலை குறைப்புக்கும் இடையே 4 மாத இடைவெளி இருப்பதை கடந்த கால புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு ஜூன் அல்லது ஜூலையில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் 2024ம் ஆண்டுதான் மக்களுக்கு பெரிய பலன் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க உலக நாடுகள் திட்டமிட்டிருந்த சூழலில் சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க வங்கிகளில் இரண்டு திவாலானதால் பல்வேறு குழப்பங்களும் நிலவி வருகிறது. ஒருவேலை ரெபோ விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இறுதி முடிவு ரிசர்வ் வங்கி அறிவிப்பிலேயே தெரியவரும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.