எச்சரிக்கையை உதாசினப்படுத்துகிறதா நிதியமைச்சகம்…?
சர்வதேச நாணய நிதியம் அண்மையில் இந்தியாவின் கடன் நிலை 100%க்கும் அதிகமாக செல்வதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இது 2028 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இது பற்றி நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சாவரின் டெப்ட்ஸ் எனப்படும் கடன் பத்திரங்கள் என்பது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெளிவுபடுத்தியது. மேலும் அதே ஐஎம்எஃப் அறிக்கையில் மத்திய அரசின் கடன் ஜிடிபி அளவை விட 70 விழுக்காடுக்கும் குறைவாக செல்லவே வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளனர். எனவே போதுமான அளவு எச்சரிக்கையுடன் இருப்பதாக மத்திய அரசு சமாளித்திருக்கிறது.
உள்நாட்டு உற்பத்தியைவிட கடன் விகிதம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலையும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், சீனாவின் ஜிடிபிக்கும் கடன்களுக்குமான விகிதம் முறையே 160,140 மற்றும் 200%ஆக இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் சுட்டிக்காட்டியிருக்கிறது. நீண்டகால ரிஸ்க் இந்தியாவில் அதிகம் என்று ஐஎம்எஃப் சுட்டிக்காட்டியது. மேலும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப அதிக முதலீடுகள் தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் முதலீடுகளை உயர்த்தவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் திட்டம் தேவை என்றும் ஐஎம்எஃப் சுட்டிக்காட்டியது. ஐஎம்எஃப் அறிக்கையை சுட்டிக்காட்டிய நிதியமைச்சகம், கொரோனா சூழல், சர்வதேச நிதி சிக்கல், ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்டவற்றால் இந்தியா மட்டுமின்றி உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடன் என்பது 2021 நிதியாண்டின் ஜிடிபியில் 88% ஆக இருந்ததாகவும், இது 2023-ல் 81%ஆக குறைந்துள்ளது என்றும் நிதயமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை 2026ஆம் ஆண்டுக்குள் 4.5%ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் நிதியமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.