ஐரோப்பாவில் ஜாக்மா, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி !
சீனத் தொழிலதிபரும், இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனருமான ஜாக்மா ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார், சீன அரசின் ஏகபோக எதிர்ப்பு விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் ஏற்பட்ட சிக்கலுக்குப் பின்னர் அவர் மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அவர் ஸ்பெயின் சென்றுள்ளார் என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்திருந்தது. கடந்த ஒரு வருடமாக அவர் வெளிநாட்டுப் பயணங்கள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2018 இல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வந்தார்.
அவரது நிறுவனத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் உச்சமாக அவரை வீட்டுக்காவலில் அரசு வைத்திருக்கலாம் என்ற ஊகச் செய்திகளை நிறுவனம் மறுத்திருந்தது, ஜாக்மா பாரம்பரிய சீன வங்கிகளை அடகுக் கடைகளோடு ஒப்பிட்ட பின்னர் சீன தேசிய கட்டுப்பாட்டாளர்களால் அழைத்து விசாரிக்கப்பட்டார், மேலும் பாசல் உடன்படிக்கைகள் உலகளாவிய வங்கி ஒழுங்குமுறை பரிந்துரைகளின்படி சீனாவிற்கு பொருத்தமானதா? என்று அவர் கேள்வி எழுப்பினார். டிசம்பரில், சீன அரசு, அலிபாபா மீதான விசாரணையைத் தொடங்கியது, பிறகு அலிபாபா நிறுவனத்தின் ஏகபோக நடைமுறைகளுக்காக அதன் தொழில்நுட்ப பெருநிறுவனத்திற்கு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது.
ஜாக்மாவுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் அதன் பிறகு நிகழத் துவங்கியது, ஷாங்காய் பங்குச் சந்தையானது அவரது ஆண்ட் குழுமத்தின் 39.7 பில்லியன் மதிப்பிலான உலகின் மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகையான இரட்டைப் பட்டியல் துவங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக நிறுத்தி வைத்தது, ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஜாக்மா, சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், சீன மக்களால் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபராகவும் வளர்ந்தார். 2019 இல் ஜாக்மா ஓய்வு பெறப்போவதாக அறிவித்தது ஒரு ஆச்சரியகரமான அறிவிப்பாக இருந்தது. தான் வேலை செய்யும் மேஜையில் இறப்பதை விட ஒரு கடற்கரையில் இறக்க விரும்புவதாக அவர் கூறியது போன்ற விஷயங்கள், சீன அரசின் கடும் நெருக்கடியால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கலாம் என்ற யூகங்களை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.