மொழிக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த தமிழகம் ! மன்னிப்புக் கேட்ட ஜொமேட்டோ !
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் புகழ்பெற்ற நிறுவனமான ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதி ஒருவரின் மொழி குறித்த முரண்பட்ட கருத்தால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது, சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் “இந்தி நமது தேசிய மொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவர் கூறியது, தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது, பரபரப்பான இந்த சர்ச்சையால் சமூக இணையதளங்களில் “Reject_Zomato” எனும் டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
நேற்று மாலை ஆறு மணியளவில் விகாஸ் என்பவர், தனது ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார், அந்தப் பதிவில், தான் ஜொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்தபோது, தான் ஆர்டர் செய்ததில், ஒரு உணவுப் பொருள் வராதது குறித்து ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது, “இந்தி நமது தேசிய மொழி, அதனால், ஒவ்வொருவரும் சிறிதளவாவது இந்தி அறிந்திருக்க வேண்டும், இந்தி தெரியாததால் உங்களுக்கு பணத்தைக் கொடுக்க முடியாது, நீங்கள் ஒரு பொய்யர் ” என அந்தப் பிரதிநிதி கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஆதரவாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் “எப்போது இந்தி இந்தியாவின் தேசிய மொழி ஆனது?” என்று கேள்வி எழுப்ப, சர்ச்சை தீவிரமடைந்தது, அவரைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் களத்தில் இறங்க பரபரப்பானது ஜொமேட்டோ விவகாரம்.
தமிழகம் முழுவதும் சமூக இணையதளங்களில் வைரலாகத் துவங்கிய “Reject_Zomato” ஹேஷ்டேக் மற்றும் பலத்த எதிர்ப்பு காரணமாக ஜோமேட்டோ நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது மன்னிப்பைக் கோரியிருக்கிறது.
“எங்களது வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்பக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கிறோம்.உணவும் மொழியும் ஒவ்வொரு மாநில கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம்” என ஜொமேட்டோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை குலைக்கும் வண்ணம் கருத்து வெளியிட்ட ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு பிரதிநிதியின் பேச்சுக்கு எழுந்த பலத்த எதிர்ப்பு பிற நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.