சமூகப் பொருளாதாரத்தை வளர்க்கும் பனைமரங்கள் – ஸ்பெஷல் ரிப்போர்ட்

பனைப் பொருளாதாரம் :
பனை, தமிழகத்தின் மாநில மரம். தமிழர்களின் வாழ்வியலோடும், பொருளாதாரத்தோடும் இரண்டற கலந்திருக்கும் பனை மரத்தை அறியாதவர்கள் வெகு சிலர்தான். குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டக் கிராமங்களின் வயலோரங்களிலும், தரிசு நிலங்களிலும் பனை மரங்கள் மண்டிக்கிடப்பதை நம்மால் பார்க்க முடியும். நுனி முதல் வேர் வரை பயனளிக்கும் பனை இன்றுவரை சமூகப் பொருளாதார வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்திருக்கிறது.

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்”
தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பொதுமறையான திருக்குறளில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பெருமையுடையது பனை. “ஒருவர் திணை அளவு மிகக்குறைந்த உதவியை செய்திருந்தாலும் கூட அதன் பயனை அறிந்தவர்கள் பல்வேறு வகைகளில் பயனளிக்கக்கூடிய பனையின் அளவாக அந்த உதவியைக் கருதுவர்” என்பதே இந்த குறள் தரும் பொருள்!
பனையும் தமிழனும் :
திருவள்ளுவர், தனது இடது கையில் கொண்டிருப்பதும் பனை ஓலையினால் செய்யப்பட்ட ஓலைச்சுவடியே. நாடோடிகளாய் அலைந்து திரிந்த ஆதி மனிதனின் மனதில் நிலையான வாழ்விடம் அமைத்துக் கொள்ளும்படியான சிந்தனை மாற்றம் உருவான போது, கூரைகளாய், இயற்கைப் பேரரணாய் பனை ஓலைகள் தான் மனிதர்களை ஆற்றுப்படுத்தின.
வெயில், மழை, குளிர், காற்று என இயற்கைச் சீற்றங்களில் இருந்து காத்துக் கொள்ள பிற்கால மனிதனுக்குப் பரந்து விரிந்த பனை ஓலைகள் தான் உதவின. தமிழகத்தின் கிராமப்புறங்களில் இப்போதும் பார்க்கமுடிகிற பனை ஓலைக் குடிசைகள் தமிழர்களின் மரபு வாழ்வியலுக்கும், பனைமரத்துக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் சரித்திரச் சாட்சிகள்.

மனிதர்களின் வாழ்விடங்களுக்கு மிக அருகில்தான் பனைமரங்களைப் பார்க்க முடியும், அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பனை மரங்கள் பெரும்பாலும் காணப்படுவதில்லை.தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது, அது பரவலான அழிவை ஏற்படுத்தியது, ஆனால் பெரும்பாலான பனைமரங்கள் பாதிக்கப்படாமல் உறுதியாக இருந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா முழுவதும் ஏறத்தாழ 10 கோடிக்கும் அதிகமான பனைமரங்களும், தமிழகத்தைப் பொறுத்தவரை 5.2 கோடி பனைமரங்களும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய தமிழகத்தின் 80% மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு மரம் என்ற விகிதத்தில் நிலமெங்கும் பரவிக் கிடக்கிறது பனைமரங்கள்.
நைட்ரஜனை அதிகரிக்கும் பனை:
100 ஆண்டுகள் வரை வாழும் பனைமரங்கள், விவசாய நிலத்தோடும், பெரும்புஞ்சை நிலங்களின் பயிர்களோடும் ஒட்டி வளர்ந்தவை, வேலிகளைச் சுற்றி வளர்க்கப்பட்ட பனைமரங்கள் பெருந்தோட்டங்களின் அசைக்க முடியாத அரண். யானைகள் கூட உள்நுழைய முடியாதபடி அவை மனித உழைப்பையும், பயிர்களையும் பாதுகாத்தன. சதுர வயல்களின் வரப்புகளில் வளர்க்கப்பட்ட பனைமரங்களுக்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமும் உண்டு, தமிழகத்தில் விளையும் நெல்வகைகளுக்கு மிக முக்கியமான ஊட்டம் “நைட்ரஜன்”. பனை மரங்களின் சல்லி வேர்களில் வளர்ச்சியடையும் ஒருவகை பாக்டீரியாக்கள் நைட்ரஜனை பெரிய அளவில் சேமித்தும், சுழற்சி முறையில் விடுவித்தும் பயிர்களின் விளைச்சலுக்கான இயற்கை யூரியாவை வழங்குகின்றன. பனை மரங்களுக்குக் காற்றில் இருந்து நைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் ஆற்றல் உண்டென்பார் இயற்கை வேளாண் முன்னோடியான மறைந்த நம்மாழ்வார்.
பனைப் பொருட்கள்:
பனை என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது நுங்கும், பனங்கருப்பட்டியும், பதநீரும், பனங்கள்ளும் தான் என்றாலும், தென்மாவட்ட வீடுகளில், தோட்டங்களில் இன்றும் வேலியாய் நிற்பவை ஓலைகளோடு கூடிய பனைமட்டைகள் தான். நூற்றாண்டுகள் கடந்தும் உத்திரங்களாக, கடலோரங்களில் மீன்பிடிக்கும் மீனவர்களின் கலங்களாக காலம் கடந்து நிற்கும் பனைமரக்கட்டைகள் பிரம்மாண்டமானவை. பொருளாதார வளம் சேர்த்தவை. பனையிலிருந்து கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் பயன்தரக்கூடியவை. பனங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் தேங்காய்ப்பூ போன்ற தவின் எனப்படும் பனம்பூ, பனம்பழங்கள், பனங்கிழங்குகளில் அதிக அளவு இரும்புச் சத்தும், நார்ச்சத்தும் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடியது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், பனைமரத்தால் பொருளாதாரம் செழுமையானது.
தொழில்முறையில் வளர்க்கப்படுகிற அல்லது பராமரிக்கப்படுகிற ஒரு பனை மரத்தில் இருந்து ஒரு ஆண்டில் 150 லிட்டர் பதநீர் கிடைக்கும், 25 கிலோ பனைவெல்லம் தயாரிக்கலாம். ஆனால், இது ஒரு பருவகாலத் தொழில்.
பனையேறுதல் என்பது ஒரு தொழிலாகவே இருந்த காலமிருந்தது, பனையேறிகள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். சில காலம் அந்த நிலப்பரப்பில் தங்கி இருந்து ஒரு நாளைக்கு 30-40 மரங்கள் ஏறி, பனைமரம் சார்ந்த பல்வேறு வேலைகளை செய்து வந்தார்கள். பனை மரமேறுவது அத்தனை எளிதான வேலையல்ல. பனங்கருக்குகள் உடல் முழுவதும் சிராய்ப்பை ஏற்படுத்தக்கூடியவை, நல்ல அனுபவம் கொண்டவர்களால் மட்டுமே பனை மரம் ஏற முடியும்.
இன்று பனைத்தொழில் செய்பவர்களும் சரி, பனையேறிகளும் சரி அரிதினும் அரிதாகிவிட்டார்கள். அண்டை மாநிலமான கேரளாவில் தென்னை மரம் ஏறுபவர்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அங்கு பெண்களும் கூட எளிதாகத் தென்னை மரங்களில் ஏறி வேலை பார்க்கிற சூழல் உருவாகியிருக்கிறது.

கைவிடப்பட்ட தொழில்கள்:
ஆனால், தென்னையும், பனையும் வாழ்வாதாரமாய் இருந்து செழித்த நம்முடைய நிலத்திலோ பனைசார் தொழில்களும், பனைமரங்களும் கைவிடப்பட்ட நிலையில் கேட்பாறற்றுக் கிடக்கிறது. கலாச்சார மற்றும் சமூக சூழலில் ஏற்பட்ட மாற்றங்களால், பனை தனது முக்கியத்துவத்தை இழந்துள்ளது. எங்கும் ரியல்-எஸ்டேட் மற்றும் தொழில்சார் வேளாண்மையினாலும், அவை பயனற்றவை என்று கருதி கோடாரிகளுக்கு இரையாகின இதன் விளைவாக பனை மரங்களின் எண்ணிக்கையில் கணிசமான இழப்பு ஏற்பட்டது.
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, முதன்முறையாக விவசாய பட்ஜெட் தனியே தாக்கல் செய்யப்பட்டது. பனை மரங்களைப் பாதுகாப்பது, அதுசார்ந்த பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பது என்று பல்வேறு அறிவிப்புகளை வழங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அவற்றில் சில குறிப்பிடத்தக்கவை:
“தமிழகத்தில் பனை மரம் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனைமரங்களை பாதுகாப்பதோடு, கூடுதலாக பனைமரங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனை கன்றுகளையும், மானியத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேலிக் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் பனை மரங்களை வளர்க்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும்” போன்ற அறிவிப்புகளும், பனை சார்ந்த பொருட்களின் உற்பத்திக்கான ஊக்க அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

பனை விவசாயிகள் கோரிக்கை:
ஆனால் இதோடு சேர்த்து, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சில கோரிக்கைகளும் விவசாயிகளிடத்தில் உண்டு.
1) மீன், இளநீர், முட்டை போன்ற உணவுப் பொருள்களுக்காக செயல்படும் சிறப்பு வாரியங்கள் எப்படி அந்தப் பொருட்களை சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனவோ அதேபோல, பனங்கிழங்கு, நுங்கு, கருப்பட்டி, பதநீர், தவின் போன்ற பனைசார் உணவுப் பொருட்களையும், பனையிலிருந்து தயாரிக்கப்படும் இதர பொருட்களையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். (ஏற்கனவே ஆந்திர அரசு நுங்கிலிருந்து ஐஸ்க்ரீம் தயாரித்து சந்தைப்படுத்துகிறது).
தமிழ்நாடு பாம்கூர் மற்றும் ஃபைபர் மார்க்கெட்டிங் கூட்டமைப்பு (TNPFMF) 1956 முதல் செயல்பட்டுவரும்போதிலும், குறிப்பாக டெல்டா பகுதிகளில் இதனை பற்றிய விவரங்கள் பரவலாக தெரிவதில்லை.
2) ரேஷன் கடைகளில் பனை சார் பொருட்களை விற்பனை செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) பனை ஓலைகளில் இருந்து செய்யப்படும் பாய், தடுக்கு, ஈர்க்கிலிருந்து செய்யப்படும் கூடைகள், சிறு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை வணிக நோக்கில் 100 நாள் வேலைத்திட்டம் போன்ற திட்டங்களோடு இணைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

4) குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தின் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புத்தூர், சிங்கம்புணரியை ஒட்டியிருக்கும் கிராமங்களின் நிலப்பகுதிகள் முழுவதும் மண்டிக்கிடக்கும் பனைமரங்கள், பராமரிக்கவும், பனையேறவும் ஆட்கள் இல்லாத நிலையில் விதைகள் வீழ்ந்து தாறுமாறாக நிலங்களில் பரவிக்கிடக்கிறது, “பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெற வேண்டும்” என்ற அறிவிப்பு பனை மரங்களால் பொருளாதாரப் பயன்பெறும் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும், இதனை உள்ளூரில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாலுகா அளவில் செயல்படும் அரசு அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் விவசாயிகள் அணுகுவதற்கு எளிதான சூழல் உருவாகும்.
நாட்டார் வாழ்வியல் ஆய்வாளர் பேராசிரியர்.ஆ.சிவசுப்பிரமணியன் சொல்வது படி “ஒரு தாவரத்தின் தேவையென்பது சமூக வளர்ச்சியோடு தொடர்புடையது. ஒன்று அந்தத் தாவரம் சமூக வளர்ச்சியில் பாதிப்புகளை, மாறுதல்களை ஏற்படுத்தும். அதேபோலவே, சமூக வளர்ச்சி சில தாவரங்களைத் தேவையில்லாததாகவும் மாற்றிவிடும். இவையிரண்டையும் வரலாற்று நியதி என்றுகூட சொல்லலாம், அந்த வகையில் பனைமரங்கள் தமிழர் வாழ்வியலோடு கலந்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாதார, சமூகத் தாவரம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை”.
மானுட வாழ்வியலோடு ஒன்றிக் கலந்திருக்கும் இயற்கையைப் போற்றுவதும், பாதுகாப்பதும் நவீன உலகின் அவசரத் தேவை. இயற்கையோடு இசைந்த உழைப்பிலும், பொருளாதார மேம்பாட்டிலும், வானிலை மாற்றங்கள் மற்றும் சூழலியல் குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தும் இந்த வேளையில் நம்முடைய மாநில மரமாம் பனையைப் போற்றிப் பாதுகாப்பது நமக்கு முன்னிருக்கும் சவால்.