பருவமழைக் குறைவு, அணைகளின் நீர்மட்டத்தையும், அறுவடையையும் பாதிக்கும் !
இந்தியாவில் இப்போது பெய்து கொண்டிருக்கும் தென்மேற்குப் பருவமழை தனது நான்கு மாத இறுதியை அடுத்த சில தினங்களில் நெருங்குகிறது.
ஜூன் மாதத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மழை, படிப்படியாக குறைந்து, ஜூன் மாத இறுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பருவமழை மீண்டும் ஆகஸ்டில் பலவீனமான கட்டத்தை அடைந்துள்ளது.
சீரற்ற மழை கோடை (காரிஃப்) பயிர் விதைப்பை பாதித்துள்ளது, பருவமழை விரைவாக புத்துயிர் பெறாவிட்டால், இறுதி விளைச்சலில், குறிப்பாக தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த வெள்ளிக்கிழமை வரை, காரிஃப் பயிர்கள் 106.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் விதைக்கப்பட்டிருப்பதை தரவுகள் காட்டுகிறது, இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பயிரிடப்பட்ட நிலப்பகுதியை விட 1.75 சதவீதம் குறைவாகும். வெள்ளிக்கிழமை வரை பருவமழை இயல்பை விட சுமார் 10 சதவீதம் குறைவாக இருந்தது, தென்னிந்தியா தவிர நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஆண்டு இயல்பை விட குறைவான மழையே பெய்துள்ளது. இந்த சீரற்ற மழையின் மிகப்பெரிய தாக்கம் கிட்டத்தட்ட 130 நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டதில் எதிரொலிக்கும். தரவுகளின்படி தென்னிந்திய அணைகளைத் தவிர, பெரும்பாலான அணைகளில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த நீர்மட்டத்தை விட குறைவாகவே காணப்படுகிறது. இந்த நிலை பலவேறு இடங்களில் நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தி ஆற்றலையும் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
“இந்தியாவின் நிலையற்ற, இயல்பை விடக் குறைவான பருவமழைப் பொழிவானது, பணவீக்கம் மற்றும் கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியில் சவால்களை உருவாக்கக்கூடும்.” என்று முன்னதாக பார்க்லேஸ் பிஎல்சியின் இந்தியத் தலைமைப் பொருளாதார நிபுணர் ராகுல் பஜோரியா கணித்திருந்தது போன்று இது பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த காலத்தில் முன்னேறிச் செல்வதற்கான பாதையில் மற்றுமொரு சவாலாக இருக்கும்.