அதிகரிக்கும் விலையால், மாறி வரும் உணவுப்பழக்கம்!
உணவுப் பொருட்களின் விலை உலகின் பெரும்பாலான பகுதிகளில் உயர்ந்து வருகிறது. இதனால் குடும்பங்கள் தங்கள் வழக்கமான உணவைப் பற்றிய கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. புரத உணவிற்க்காக இறைச்சியை தவிர்த்து பால், முட்டை, பீன்ஸ் போன்றவற்றுக்கு மக்கள் மாறி இருக்கிறார்கள். சில வீடுகளில் பால் என்பது குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஆடம்பர உணவாகவும் தினசரி உணவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட்ட பழங்கள் இன்று விருந்துபசாரிப்பாக மாறிவிட்டது.
உணவுப்பொருள் விலைகள் கடந்தாண்டு ஜூலை முதல் இந்த ஜூலை வரை 31 சதவீதம் உயர்ந்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தொகுத்த ஒரு புள்ளிவிவரக் குறியீடு சொல்கிறது. விநியோகச் சங்கிலியின் இடர்பாடு, தீவிர வானிலை மாற்றம் ஆகிய நிலையற்ற காரணிகளும் இவ்விலையேற்றத்திற்கு மேலும் வழு சேர்க்கின்றன. தொற்றுநோயால் ஏற்பட்டிருந்த சில தடைகள் நீங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும், காலநிலை மாற்றம் மற்றும் இறக்குமதிக்கான சீனாவின் கோரப்பசி போன்ற காரணிகள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
மத்திய வங்கிகள், கொள்கை முடிவுகளை எடுக்கும்போது பெரும்பாலும் உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கத்தைப் புறக்கணிக்கின்றன, ஏனெனில் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் தொகுப்பில் மிக எளிதில் மாறக்கூடிய வகையானதாக இவை உள்ளன. “இருப்பினும், சாதாரண மக்கள் பணவீக்கத்தை நோக்கும் பட்சத்தில், பணவீக்கத்திலிருந்து உணவு மற்றும் எரிபொருளை நீக்கி பார்க்க முடியாது”. என்கிறார் கொலம்பியா பிசினஸ் ஸ்கூலின் நிதி மற்றும் பொருளாதார பேராசிரியர் ஷாங்-ஜின் வெய்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது சில நாடுகளுக்குப் பதட்டத்தைக் கொடுத்துள்ளது. உலகின் முன்னணி தானிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யா உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்த, பிப்ரவரியில் கோதுமை ஏற்றுமதிக்கு வரி விதிக்கத் தொடங்கியது. இதேபோல் அர்ஜென்டினா, மே மாதத்தில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கான தற்காலிக தடை விதித்தது. இந்நிகழ்வுகள் 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளை நினைவூட்டுகிறது. ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அப்போது உணவுக் கலவரங்கள் ஏற்பட்டன.
“உணவு விலை ஏற்றங்கள் அடிப்படையில் நாம் அனைவரையும் பாரபட்சமின்றி உரசிப்பார்த்துவிடுகிறது” என்று வாஷிங்டனை மையமாகக் கொண்ட “பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகானாமிக்ஸில்” பணிபுரியும் கல்லன் ஹென்றிக்ஸ் கூறியுள்ளார். அரசியலில் ஆர்வம் உள்ளவர்களோ இல்லையோ, உணவு பொருள் விலையை பற்றியும் எப்போது ஏறக்கூடும் என்றும் அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் பெரும்பாலான குடும்பங்களுக்கு அவரகள் நிவாரணம் பெறுவது பற்றாக்குறையாகவே இருக்கிறது.
சாதாரண குடும்பங்களில் உணவின் காரணமாக கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் எழுகின்றன. கணவர் தனது மனைவி அதிகமாக செலவு செய்வதாகவும், மனைவி அன்றாட சமையலுக்காக போதுமான பணம் தருவதில்லை எனவும், விலை ஏற்றத்தை தாங்க முடியாது பொருட்களை குறைத்தும், அதிகமான பேரம் பேசியும் பொருட்களை வாங்கவேண்டியுள்ளது இதை கணவர் உணர்வதில்லை எனவும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சுமத்துகின்றனர். இவ்வாறான பிரச்சனைகளால், சாதாரணமாக கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்களில் அந்த குடும்ப குழந்தைகளுக்கு கிடைப்பதும் தடைபட வாய்ப்புள்ளது. எதிர்கால சந்ததியினர் ஊட்டமுடன் வளர, உணவு பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம், யார் கவனிப்பார்?