போதுமான கோதுமை கையிருப்பில் உள்ளது!!!
உள்ளூரில் அதிக கோதுமையை விநியோகிக்கும் வகையில் போதுமான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 24 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடப்பாண்டு ரபி பருவத்தில் மட்டும் 105 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை உற்பத்தி இருப்பதாகவும், சந்தைக்கு 95 முதல் 98மில்லியன் டன் கோதுமை வந்துள்ளதாகவும்,இது உள்ளூர் தேவைக்கு போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் இதுவரை 4 புள்ளி 5 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த மே 13ம் தேதி விதிக்கப்பட்ட கோதுமை தடைக்கு முன்பாக 2 புள்ளி 1 மில்லியன் டன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மேலும் கள்ளச் சந்தையில் பதுக்கி வைத்திருப்போர் குறித்து கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடந்த நிதியாண்டு இந்தியாவின் கோதுமை உற்பத்தி 109.6 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் வீசிய திடீர் வறட்சி காரணமாக நடப்பாண்டு கோதுமை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதேபோல் கடந்தாண்டு 43 மில்லியன் டன் அளவு கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்திருந்தநிலையில் நடப்பாண்டு கொள்முதல் அளவு 19 மில்லியன் டன்னாக சரிந்துள்ளது. இதன் காரணாமாக ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது