சந்தை மூலதனத்தில் ₹ 13 ட்ரில்லியன் அளவைக் கடந்த TCS !
“டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்” (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021) அன்று பங்குச் சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது புதிய உச்சத்தை எட்டியதற்குப் பிறகு இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.
டாடா குழுமங்களின் ஒரு அங்கமான TCS நிறுவனத்தின் பங்கு, கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து, சென்ற செவ்வாய்க்கிழமை சந்தை முடிவுறும் வேலையில் 2.32 சதவிகித வளர்ச்சியுடன் ₹3552.40 விலையில் நிறைவுற்றது. நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட இந்த அதீத வளர்ச்சி, ₹ 13.14 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பை எட்டுவதற்கு உதவி இருக்கிறது. சந்தை மூலதன மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ₹ 14.36 ட்ரில்லியன் மதிப்பில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் TCS இரண்டாம் இடத்தை எட்டியிருக்கிறது. (BSE தரவுகளின் அடிப்படையில்)
TCS நிறுவனம், தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாகவும், இந்நிறுவனம் வங்கி, நிதி மற்றும் காப்பீட்டுத் துறை (BFSI), தகவல் தொடர்பு, தயாரிப்பு, சில்லறை வணிகம் மற்றும் உயர் தொழில் நுட்பத் துறைகளிலும் தங்கள் சேவைகளை பரவலாக செயல்படுத்தி வருகிறது. TCS, தொடர்ச்சியான அதன் உள்ளார்ந்த வருமான வளர்ச்சியையும், துறையில் ஏனைய நிறுவனங்களை விட 25% அதிக வளர்ச்சியைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையின் தொடர் ஆண்டு வளர்ச்சியில் (15-20 சதவிகித வளர்ச்சி) அதிகப் பலனடைந்த நிறுவனங்களில் TCS முன்னணி வகிக்கிறது.
ஜூன் மாதத்தில் முடிவடைந்த காலாண்டு முடிவுகளின் அடைப்படையில், TCS நிறுவனத்தின் ஐரோப்பிய சேவைப் பயன்பாடுகள் அதிகரிப்பு, விற்பனையாளர் ஒருங்கிணைப்பு, வியாபாரக் கணிப்புகள் போன்ற காரணிகள் நிறுவனத்தின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) 21-23 நிதியாண்டுகளில் 13 சதவிகிதமாக அதிகரிக்கும்” என்கிறார்கள் ICICI செக்யூரிட்டீஸ் ஆய்வாளர்கள். துறையில் முன்னணி வகிப்பதற்கான வாய்ப்புகள் தொடரும் என்றும், வளர்ச்சிக்கான அடிப்படைப் புள்ளிகள் 142 (bps) அளவு 21-23 நிதியாண்டுகளில் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கணித்திருக்கிறார்கள்.
“அதிகரிக்கும் ஆர்டர்கள், செயல்திறன் தகுதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் மேல்நோக்கு வளர்ச்சி ஆகியவை இணைந்து நிறுவனத்தை முன்வரிசைக்குக் கொண்டுவரும் என்றும், கூடுதலாக மேம்படுத்தப்பட்ட செலவினக் குறைப்புடன் இணைந்த லாப விகித அதிகரிப்பு, ஆரோக்கியமான இருப்புநிலை போன்றவை வரவிருக்கும் காலாண்டில் நிறுவனத்தின் வளர்ச்சியை கண்கூடாகக் காண்பதற்கு உதவும்.” என்கிறது ஜியோஜிட் பைனான்சியல் சர்வீசஸ்.