Zomato IPO இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி நமக்கு என்ன சொல்கிறது?
உணவு விநியோக நிறுவனமான Zomato சமீபத்தில் ஒரு ஆரம்ப பொது வழங்கல் (Initial Public Offering-IPO) விடுத்தது. நிறுவனம் விற்க விரும்பும் ஒவ்வொரு பங்கிற்கும், 38க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்தன. எனவே, தோராயமாக, 200 பங்குகளுக்கு யாராவது விண்ணப்பித்திருந்தால், அவர்கள் சுமார் 5 பங்குகளைப் பெற்றிருப்பார்கள். நிறுவனம் IPO மூலம் சுமார் ₹9,400 கோடியைத் திரட்ட விரும்பியது; ₹3.5 லட்சம் கோடிக்கு விண்ணப்பங்களைப் பெற்றது. அத்தகைய தேவை இருந்தது.
Zomatoவுக்கு முன்பு, Clean Science and Technology நிறுவனம் ₹1,500 கோடிக்கு மேல் திரட்ட விரும்பியது. விற்க விரும்பும் ஒவ்வொரு பங்கிற்கும், 93க்கும் மேற்பட்ட பங்குகளுக்கான விண்ணப்பங்கள் கிடைத்தன. ரூபாய் அடிப்படையில், ₹1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்தன.
சமீபத்திய IPOகளின் வெற்றி இப்போது பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்பும் Zomato போன்ற பல யூனிகார்ன்களைப் (unicorn) பற்றிய பேச்சுக்கு வழிவகுத்தது. ஒரு பில்லியின் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய நிறுவனத்தை யுனிகார்ன் என்பார்கள்.
இங்கு என்ன நடக்கிறது?
நிலையான வைப்புகளுக்கான (fixed deposits) வட்டி விகிதங்கள் (interest rates) மிகக் குறைந்த அளவில் உள்ளன. மே மாதத்தில், வங்கிகளின் கால வைப்புகளுக்கான (பெரும்பாலும் நிலையான வைப்பு) சராசரி வட்டி விகிதம் (average interest rate) 5.32%ஆக இருந்தது. மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் (inflation) 6.3%ஆக உள்ளது. ஒரு நிலையான வைப்புத்தொகையின் உண்மையான வருவாய் அதன் மீது செலுத்தப்படும் வட்டியை விடக் குறைவாக இருக்கும், இது ஒருவரின் வரி வரம்பைப் பொறுத்தது.
மேலும், முதலீட்டின் மற்ற வடிவங்கள் மிகுந்த லாபத்தை ஈட்டவில்லை. மொத்தத்தில், ரியல் எஸ்டேட் வருமானம் பல ஆண்டுகளாக ஒற்றை இலக்கத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்ஸிகள் (cryptocurrency) மோசமாகச் செயல்பட்டு வருகின்றன. இது விரைவாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பலரைப் பொதுவாகப் பங்குகள் மற்றும் குறிப்பாக IPOகளை நோக்கித் தள்ளியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகச் சிறு வணிகங்கள் போராடி வருகின்றனர். பணமதிப்பிழப்பு (demonetisation) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services tax) அமல்படுத்தப்படுவது அவர்களை பின்னுக்குத் தள்ளியது. கோவிட் தொற்றுநோய் தொடர்ந்து பரவுவது அவர்களை வாட்டியெடுக்கிறது. இது பல சிறு வணிகர்களைப் பங்குச்சந்தையை நோக்கித் தள்ளியுள்ளது. கடந்த 16 மாதங்களில், ஒரு வியாபாரத்தை நடத்துவதை விடப் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை அவர்கள் உணர்த்துள்ளார்கள்.
இதற்கு மேல், வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு முழு தலைமுறையினருக்கும் தங்கள் கணினித் திரைகளுக்கு அல்லது போன்கள் முன்னால் உட்கார்ந்து பயன்பாடுகளைப் பயன்படுத்தி வர்த்தகத்தை எளிதாக்கியுள்ளது. டிமேட் கணக்குகளை (Demat accounts) ஒருவரின் வீடுகளிலிருந்து எளிதாகத் திறக்க முடியும் மற்றும் முன்பைவிட மலிவான இணைய அலைவரிசை (internet) மற்றும் ஸ்மார்ட் போன்கள் பங்குகளைத் தேட மேலும் உதவியது. டிசம்பர் 2019 முதல் மார்ச் 2021 வரையிலான டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 3.93 கோடியிலிருந்து 5.51 கோடியாக, 40% அதிகரித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பங்குகளை விற்பனை செய்யும் நிபுணர்கள் வணிக டிவி, செய்தித்தாள்கள் மற்றும் ஒரு சில வலைத்தளங்களில் விளம்பரப் படுத்தினர். மலிவான ஸ்மார்ட் போன்கள் மற்றும் மலிவான இணையம் ஆகியவை பல சமூக ஊடக செல்வாக்கு உள்ளவர்களின் (social media influencers) உயர்வுக்கு வழிவகுத்தன. அவர்கள் பழங்கால நிபுணர்கள் போன்று பங்குகளை விற்கத் தொடங்கினர். இவர்களில் சிலர் பெரும் பின்தொடர்பவர்களை (followers) கொண்டுள்ளனர் மற்றும் மக்கள் தங்கள் கருத்துக்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று அறிவர். அவர்கள் ஒரு பங்கு அல்லது IPOவை பரிந்துரைத்தால், அவர்களைப் பின்தொடர்பவர்கள் அதை வாங்குகிறார்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில சந்தர்ப்பங்களில் இந்த மக்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது; அவர்களைப் பின்தொடர்பவர்களை ஒரு குறிப்பிட்ட பங்குத் தரகரை நோக்கிச் செலுத்த. நிச்சயமாக, அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பெரும்பாலும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்தால் முதலீட்டில் செல்வாக்கு செலுத்தும் செயல்பாடு சரிந்துவிடும். இது சமூக ஊடகங்களில் பரவி 24/7 நடக்கும் என்பதால், இது பெரும்பாலான நேரங்களில் கட்டுப்படுத்தப்படாமல் போகிறது.
முன்னர் குறிப்பிட்டபடி, பணவீக்க விகிதத்தை விடக் குறைவான வட்டி விகிதங்கள் மக்களைப் பங்குகளை நோக்கி உந்திச் செல்கின்றன. மறுபுறம், நிதிச் சேவைத் துறையும் (financial services industry) பணத்தால் நிரம்பி வழிகிறது. இந்த சூழ்நிலையில், IPO நிதி லாபகரமான வணிகமாக உருவெடுத்துள்ளது. அடிப்படையில், IPO நிதி முதலீட்டாளர்கள் முதலீடு செய்யப் பணம் கடன் வாங்க அனுமதிக்கிறது.
கடன் வாங்குவதன் மூலம், முதலீட்டாளர்கள் ஒரு IPOவில் அதிக எண்ணிக்கையிலான பங்குகளைப் பெறுவார்கள் என்று நம்பலாம். ஒதுக்கப்பட்ட பிறகு, இந்த பங்குகளைப் பங்குச் சந்தையில் ஒரு முறை விற்கலாம்.
IPO பங்குகளுக்கு பெரும் தேவை இருப்பதால், அனைவருக்கும் ஒதுக்கீடு கிடைக்கப் போவதில்லை. எனவே, யார் வேண்டுமானாலும் ஒரு குறிப்பிட்ட பங்கை அதன் IPO பட்டியலிட்ட பிறகு, சந்தையிலிருந்து வாங்கலாம். இது பங்குகளின் விலையை உயர்த்துகிறது. கடன் வாங்கி முதலீடு செய்தாலும், முதலீட்டாளர்களுக்கு லாபத்தைப் பெற்றுத் தருகிறது IPO.
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs – non-banking finance companies) பெரிய அளவில் IPOகளை நம்புவதாகச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழில் துறைக்கு வங்கிக் கடன் வழங்குவது வெறும் 0.8% வளர்ச்சியடைந்த நேரத்தில் இது வருகிறது. அடிப்படையில், பங்குகளில் ஊகிக்கத் தனிநபர்களுக்குக் கடன் வழங்குவதில் நிதி அமைப்பு மகிழ்ச்சியடையும் ஒரு நிலையை எட்டியுள்ளோம், ஆனால் அது பொருளாதார நடவடிக்கையை உருவாக்கும் தொழிலுக்குக் கடன் கொடுக்க விரும்பவில்லை.
நிச்சயமாக, எந்தவொரு கடன் வழங்கலும் இருவழி செயல்பாடாகும். வணிகங்கள் கடன் வாங்கும் மனநிலையில் இல்லை. சில சந்தர்ப்பங்களில், அவர்கள் முந்தைய கடன் பிடியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை.
இவை அனைத்தும் ஒரு நாள் லாபம் ஈட்டக்கூடிய நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்கள் பங்குச் சந்தையால் மிக அதிக விலையில் மதிப்பிடப்படும் சூழ்நிலைக்கு வழிவகுத்தது. மேலும் Zomato இதை கிக்ஸ்டார்ட் செய்துள்ளது. கண்டிப்பாக இன்னும் நிறைய வர இருக்கிறது.
Credits: Vivek Kaul, Deccan Herald